Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
இறைவன் பெயர்வலம்புரநாதர்
இறைவி பெயர்வடுவகிர்க்கண்ணியம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்தும் பூம்புகார்ச் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து, அங்கிருந்து சென்றாலும் இத்தலத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில்
மேலப்பெரும்பள்ளம்
மேலையூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609 107

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
valampuram route map

சீர்காழியில் இருந்து திருவலம்புரம் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தலச் சிறப்பு: மகாவிஷ்ணு சிவனைக் குறித்து தவம் செய்யப் போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக மகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என் தல வரலாறு கூறுகிறது. காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) திருவலஞ்சுழி தலத்தில் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழியில் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னை பலி கொடுத்து காவிரியை மீண்டும் வெளிக் கொண்டுவந்த பிறகு வலமாக வந்து இத்தலத்தில் கரையேறினார். அதனால் இத்தலம் "திருவலம்புரம்" ஆனது. ஹேரண்ட மகரிஷிக்கு இத்தலத்தில் தனி கோயில் உள்ளது. சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார். இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் "மேலப்பெரும்பள்ளம்" என்று அழைக்கப்படுவதாக்க் கூறுகிறார்கள்.

கோவில் அமைப்பு: மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்ற இத்தலம் ஒரு மாடக் கோவிலாகும். கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் விற்றிருக்கின்றார். அருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட இலிங்கமும் உள்ளன. கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தில் மூலவர் வலம்புரிநாதர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். உள் பிராகாரத்தில் சூரியன், விநாயகர், நால்வர், விசுவநாதர், முருகர், இராமநாதர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் மூர்த்தம் மிகச் சிறப்பாக உள்ளது. கருவறை சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. நடராசர் சபையும் மகாமண்டபத்தில் உள்ளது. ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை உள்ளன. தல விருட்சமாக ஆண்பனை விளங்குகிறது.

தல வரலாறு: மகத நாட்டு மன்னன் தனஞ்செயன் என்பவன் தனது மகனிடம், "நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு எனது அஸ்தியை கரைத்து விடு," என்ற கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக மாறியதைக் கண்டு அஸதியை இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் கரைத்தான். அந்த மன்னனின் சிலை இத்தலத்தில் உள்ளது. எனவே இத்தலம் காசியை விட புனிதமானது என்று புராணங்கள் கூறுகிறது.

மற்றொரு தல வரலாறும் இத்தலத்திற்கு சொல்லப்படுகிறது. அரசன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாக அமைச்சர் மூலம் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது. பழி நீங்க சான்றோர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்களும் நாடொறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் அதில் எவரேனும் மகான் "ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில் உள்ள மணி ஒலிக்கும், அப்போது பழிதீரும்" என்று மன்னனுக்குச் சொல்லினர். அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி, "அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்" 'என கூறியது. அன்னதானம் தொடர்ந்து நடந்து வர, பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. பட்டினத்தாரை மன்னன் சென்று வரவேற்கும் ஐதீக திருவிழா இத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

Top
வலம்புரிநாதர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் தோற்றம்
ஆலயத்தின் தோற்றம்
ஆலயத்தின் தோற்றம்
ஆலயத்தின் தோற்றம் - நந்தி மண்டபம், பலிபீடம்
பட்டினத்து அடிகள் வடிகஞ்சி குடிக்கும் சித்திரம்
தேவார மூவர் சிவனை வழிபடும் சித்திரம்
ஏரண்ட முனிவரும், மன்னனும் சிவனை வழிபடும் சித்திரம்
தல விருட்சம் பனைமரம்