Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவிற்குடி
இறைவன் பெயர்வீரட்டானேஸ்வரர்
இறைவி பெயர்ஏலவார்குழலி, பரிமளாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது (1) திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் (SH23) வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி கங்களாஞ்சேரி அடைந்து, நாகப்பட்டினம், நாகூர் செல்லும் சாலையில் (SH148) வலதுபுறம் திரும்பி விற்குடி ரயில் பாதையைக் கடந்து விற்குடியை அடைந்து, "விற்குடி வீரட்டேசம்" என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப் பிரியும் (வளப்பாறு பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.
(2) நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத் திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்டு ரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றும் கோயிலை அடையலாம். கோயில் வரை பேருந்து, கார் செல்லும். திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரிநிர்வாக அதிகாரி
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்
திருவிற்குடி
திருவிற்குடி அஞ்சல்
வழி கங்களாஞ்சேரி
நாகப்பட்டிணம் வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 610101

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
tiruvirukudi route map

திருவாரூரில் இருந்து திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் ஆலயம் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அட்ட வீரட்டத்தலங்களில் திருவிற்குடியும் ஒன்றாகும். சலந்தாசுரன் என்பவன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்து சாகாவரம் கேட்டான். பிரம்மா அவ்வாறு சாகாவரம் தர இயலாது என்று கூற, சலந்தாசுரன் "தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்" என வரம் வாங்கி விட்டான். தனது வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான். சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். அதற்கு முனபு திருமாலை சலந்தாசுரன் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இத்தருணத்தில் சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது காற் பெருவிரல்லால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்து உன் தலை மேல் தாங்கி நில் என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்கிறது. சலந்தாசுரன் என்பவனை சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்தலம் அஷ்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

சலந்தாசுரன் மனைவி தன் கணவர் இறக்கக் காரணமாக இருந்த மகாவிஷ்ணுவைப் பார்த்து "நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்" என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்து, மனைவியைப் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற அவரின் பித்து விலகுகிறது. துளசி தான் இங்கு தல விருட்சம் என்பது குறிப்பிடத் தக்கது.

இத்தலத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. கோவிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம். குளத்தின் கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச் சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள் பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி, மாரி முதலிய சந்நிதிகள் உள்ளன. சலந்தரனைச் சம்ஹரித்த மூர்த்தியின் உற்சவத்திருமேனி தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான்மழு ஏந்தி, ஒருகை ஆயுத முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து துவார பாலகரைத் தொழுது, துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் மீதுள்ள மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

முன்னால் இடப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். அம்பாள் சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளும் உரிய கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது. மண்டபத்தின் இடதுபுறம் நடராச சபையும், எதிரில் தெற்கு வாயிலும் சாளரமும் உள்ளன. பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் தீர்த்தங்கள் இரண்டு. சக்கரதீர்த்தம் கோயிலின் முன்னாலும், சங்குதீர்த்தம் கோயிலின் பின்புறமும் உள்ளது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்குரிய தனது இப்பதிகத்தை தினந்தோறும் ஓதுபவர்களை வினைகள் அடையாது என்றும், அவர்கள் வாழ்க்கையில் வருத்தம் இல்லாமல் இருப்பார்கள் என்றும், தீவினைகள், இடர்கள் அணுகாது என்றும், துன்பம் என்ற நோய் அணுகாது இருப்பார்கள் என்றும் பலவாறு குறிப்பிடுகிறார்.

Top
வீரட்டானேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் இராஜகோபுரம்
இராஜகோபுரம் - மற்றொரு தோற்றம்
நவக்கிரக சந்நிதி
கருவறைச் சுற்றில் பிடாரி, மாரி