Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வர்த்தமானேஸ்வரர் கோவில், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
இறைவன் பெயர்வர்த்தமானேஸ்வரர்
இறைவி பெயர்கருந்தாழ்குழலி, மனோன்மனி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் இத்தலம் உள்ளது. திருப்புகலூர் நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி நிர்வாக அதிகாரி
அருள்மிகு வர்த்தமானேஸ்வரர் திருக்கோவில்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் தேவஸ்தானம்
திருப்புகலூர் அஞ்சல்
வழி திருக்கண்ணபுரம்
நாகப்பட்டிணம் வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609704

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும், நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற் மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சந்நிதிக்கு வலப்புறம் உள்ளது. இலகு இறைவன் வர்த்தமானேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். சந்நிதியுள் நுழைந்ததும் இடதுபுறம் முருகநாயனார் சந்நிதியைக் காணலாம். வர்த்தமானேஸ்வரரை சம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார். அவரின் பதிகக் கல்வெட்டு சந்நிதியில் உள்ளது. வர்த்தமானேஸ்ரர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். இறைவனையும், அம்பாள் மனோன்மணியையும் தரிசிக்க இயலாதவாறு இரு சந்நிதிகளும் இருட்டடித்து காணப்படுகின்றன. ஆலய நிர்வாகிகள் தகுந்த ஏற்பாடுகள் செய்து வெளிச்சம் வர விளக்குகள் பொருத்தி வைத்தால் நன்றாக இருக்கும்.

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் தலத்தை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பதிகம் பாடி இருந்தாலும், அதே ஆலயத்திற்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தை திருஞானசம்பந்தர் மட்டுமே பதிகம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பதிகத்தின் 3-வது மற்றும் 5-வது பாடலில் 63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்து வந்ததை சம்பந்தர் தனது பதிகத்தில் 5-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

1. பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிரு ளாடும் நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.

2. முயல்வ ளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை
இயல்வ ளாவிய துடைய வின்னமு தெந்தையெம் பெருமான்
கயல்வ ளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்
வயல்வ ளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

3. தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

4. பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம்
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.

5. ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.

அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும் 
கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட அந்த 
மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் 
எல்லோர்க்கும் தலைவர், விடையேறு உடையவர்,
இனிய அமுதம் போன்றவர், எந்தை, எம்பெருமான்
குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர்.
பாடலின் பொழிப்புரை: www.thevaaram.org

6. தளிரி ளங்கொடி வளரத் தண்கய மிரியவண் டேறிக்
கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரு மொளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.

7. தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி யெழினரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிரு ணீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்
அஞ்ச னம்பிதிர்ந் தனைய வலைகடல் கடையவன் றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே

8. சாம வேதமொர் கீத மோதியத் தசமுகன் பரவும்
நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

9. சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறு முமையை யஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.

10. கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னால்தம்
மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யென விரும்பேல்
செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.

11. பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற்புக லூரில்
மங்குன் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் றண்டமிழ் பத்தும்
எங்கு மேத்தவல் லார்கள் எய்துவ ரிமையவ ருலகே.