A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் எண்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோவில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 266 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

மஹாபாரதத்தில் வேதவியாசர் அர்ஜுனனை பார்த்து "எவன் ஒருவன் வைகறைத் துயிலெழுந்து மனத்தூய்மையோடு ருத்ர ஜபம் செய்கின்றானோ அவன் இவ்வுலகில் அடைய முடியாத ஐஸ்வர்யம் எண்று எதுவும் இல்லை" என்று சொல்கிறார்.

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோவில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோவில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

பாடல் பெற்ற சிவஸ்தலங்களின் பெருமை

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது. பிறகு எண்ணை ஊற்றி கறையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும் போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு சோழ மன்னன் வருந்தியபோது "ஈண்டு வேண்டுவன வைத்தோம்" என்று அசரீரி வாக்கு எழ, பிறகு கிடைத்தவற்றை ஒழுங்கு படுத்தினார்கள். தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது.

எங்கள் நோக்கம்

தமிநாட்டில் உள்ள 266 தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களைப் பற்றிய வலைத்தளம் இது. இந்த 266 கோயில்களும் தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளன, அங்கு எப்படி செல்வது, அவற்றின் சிறப்புகள் யாவை என்பது பற்றிய ஓர் சிறிய கண்ணோட்டம் தான் இந்த முயற்சி.

இவ்வலைத்தளத்தின் மூலம் இப்புராதன ஆலயங்கள் பற்றிய துல்லியமான விவரங்கள், அதன் பெருமைகள், கட்டிட அழகு மற்றும் தேவாரப் பாடல்களில் வரும் புகழ் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, இந்தப் பாரம்பரியம் எதிர்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டி ஊக்கமளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இந்தியாவில் தமிழ்நாட்டின் இருப்பிடம்

வங்கக் கடலோரம் அமைந்துள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை தமிழ்நாட்டின் நுழைவாயில் என்று கூறினால் அது மிகையல்ல. அனேக பன்னாட்டு விமான சேவைகள் தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னைக்கு போக்குவரத்து வசதியை அளிக்கின்றன. மேலும் இந்தியாவில் உள்ள விமான சேவைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன.

சென்னை சென்ட்ரல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தமிழ்நாட்டை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இனைக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல ரயில் போக்குவரத்து வசதியை அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில்களைப் போய் பார்ப்பதற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் வசதியானது.

தமிழ்நாட்டில் சாலை வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளமையால் எந்த ஒரு தேவாரப் பாடல் பெற்ற சிவ ஸ்தலத்தையும் எளிதாகப் போய் தரிசிக்க முடியும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வசதியாக பேருந்துகள் நாள் முழுதும் இயக்கப்படுகின்றன. அநேக சிவ ஸ்தலங்கள் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் அமைந்து உள்ளன. ஓரு முக்கிய நகரை தங்கும் இடமாக வைத்துக்கொண்டு அந்நகரைச் சுற்றிலும் உள்ள பல சிவ ஸ்தலங்களை தரிசிக்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள

இந்த வலைத்தளத்தை நிறுவிய திரு.நாராயணசாமி எழுதிய பரிகாரத் தலங்கள் என்ற கட்டுரைகளின் தொகுப்பு, திணமணி தமிழ் நாளிதழின் இணைய தளமான www.dinamani.com பதிப்பில் தொடர்ந்து சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக வெளிவந்தது. அந்த கட்டுரைகளின் தொகுப்பு 'பலன் தரும் பரிகார தலங்கள்' என்கிற தலைப்பில் Pinnalce Books என்ற பதிப்பகத்தார் 2 புத்தகங்களாக அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு புத்தகத்திலும் 54 ஆலயங்களைப் பற்றியும், அவ்வாலயங்களின் பரிகார சிறப்புகளைப் பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் Rs.200/- விலையில் பதிப்பகத்தாரிடம் கிடைக்கும்.

site logo
தென்னாடுடைய சிவனே போற்றி

புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 20 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் - இரண்டு பதிப்புகளையும் புதுப்பிக்கப்படுகின்றது. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.

Stay Updated!

தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel