Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமுல்லைவாயில் |
| இறைவன் பெயர் | மாசிலாமணி ஈஸ்வரர் |
| இறைவி பெயர் | கொடியிடை நாயகி அம்மன் |
| பதிகம் | சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் ஒரு பகுதியான அம்பத்தூரில் இருந்து சுமார் 3 Km தொலைவில் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| ஆலய முகவரி |
அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில் திருமுல்லைவாயில் அஞ்சல் திருவள்ளூர் மாவட்டம் PIN - 609113 |
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
தல வரலாறு: காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற் கொண்ட போது, எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். (இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும்). போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். (இந்த தல வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் 10வது பாடலில் குறிப்பிட்டுள்ளார். பாடல் கீழே தரப்பட்டுள்ளது.) இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் குறும்பர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையைப் பொற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். குறும்பர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அதுவே இந்த மாசிலாமனி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.
தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார். அவருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானைமீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது ஆகியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் மற்றும் இறைவி சந்நிதி இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடை நாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.
கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.
தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நாலவர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை பௌர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை - பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்து கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.
ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்க் வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையும் திறந்திருக்கும்.
| திருமுல்லைவாயில் மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() தெற்கு கோபுர நுழைவு வாயில் மற்றும் 16 கால் மண்டபம் |
![]() கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் |
|
![]() கிழக்கு வெளிப் பிரகாரத்திலிருந்து ஆலய தோற்றம் |
![]() குசலபுரீஸ்வரர் சந்நிதி |
|
![]() ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி |
![]() கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி |
|
![]() கிழக்கு நுழைவாயிலில் இருந்து ஆலய தோற்றம் |
![]() தெற்கு கோபுரம் மற்றும் அம்பாள் சந்நிதி கோபுரம் |
|
![]() தல புராணத்தை விளக்கும் சுதைச் சிற்பம் | ||
![]() மாசிலாமணி ஈஸ்வரர், கொடியிடை நாயகி அம்மன் | ||
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் "அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே" என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
1. திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடைக் கழல்கள் என்று எண்ணி ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகு அமர் சோலை சூழ் திருமுல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 2. கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று தேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 3. விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் செண்பகச் சோலை சூழ் திருமுல்லை வாயிலாய் தேவர்தம் அரசே தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 4. பொன் நலங் கழனிப் புது விரை மருவிப் பொறிவரி வண்டி இசை பாட அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் செந்நெல் அங்கழனி சூழ் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பன்னலந் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே. 5. சந்தன வேருங் கார் அகில்குறடுந் தண் மயிற்பீலியுங் கரியின் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக் கொடிகளுஞ் சுமந்து கொண்டு உந்தி வந்து இழி பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியே பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 6. மற்று நான் பெற்றதார் பெறவல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினுங் குணம் எனக் கொள்ளுங் கொள்கையால் மிகைபல செய்தேன் செற்று மீது ஓடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 7. மணிகெழு செவ்வாய் வெண்நகைக் கரிய வார்குழல் மா மயில்சாயல் அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல் அறாத திணிபொழில் தழுவு திருமுல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் பணியது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 8. நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே உம்பரார் தொழுது ஏத்துந் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லைவாயில் தேடியான் திரிதர்வேன் கண்ட பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 9. மட்டு உலாம் மலர்கொண்டு அடியிணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே செல்வத் திருமுல்லைவாயில் செல்வனே செழுமறை பகர்ந்த பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 10. சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட்டு எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் நல்லவர் பரவுந் திருமுல்லைவாயில் நாதனே நரைவிடை ஏறீ பல்கலைப் பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. 11. விரை தரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானைத் திரை தரு புனல்சூழ் திருமுல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் உரைதரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே.
| சென்னை நகரிலும் அதன் அருகிலும் உள்ள மற்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் | ||
|---|---|---|
| திருவொற்றியூர் | திருவலிதாயம் | திருவேற்காடு |
| திருமயிலை | திருவான்மியூர் | |
















