விகிர்த நாதேஸ்வரர் கோவில், வெஞ்சமாக்கூடல்
சிவஸ்தலம் பெயர்: வெஞ்சமாக்கூடல் (இவ்வூரை வெஞ்சமாங்கூடலூர் என்று மக்கள் கூறுகின்றனர்)
இறைவன் பெயர்: விகிர்த நாதேஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர்
இறைவி பெயர்: விகிர்தேஸ்வரி, விகிர்தநாயகி, மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை
பதிகம்: சுந்தரர் - 1
விகிர்த நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்



எப்படிப் போவது
கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தென்மேற்கே பயணம் செய்தால் ஆறு ரோடு பிரிவு என்ற இடம் வரும். அங்கிருந்து பிரியும் ஒரு கிளைச் சாலயில் சுமார் 8 கி.மீ. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து (Town Bus) வெஞ்சமாங்கூடல் வழியாகச் செல்கிறது.
ஆலய முகவரி
வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல்
வழி மூலப்பாடி
அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம்
PIN - 639109
ஆலய நேரம்
காலை: 6:00 - 12:00
மாலை: 4:00 - 8:00
கோவில் அமைப்பு
பெயர்
குடகனாறு மற்றும் சிற்றாறு (தற்போது இது குழகனாறு என்று அழைக்கப்பட்டாலும் சுந்தரர் தனது பதிகத்தில் சிற்றாறு என்று தான் குறிப்பிடுகிறார்) இரண்டும் கூடும் இடத்தில் இருப்பதாலும், வெஞ்சன் என்ற வேடுவ அரசன் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும் இத்தலம் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. சிற்றாற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கோபுர அமைப்பு
கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்) இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது. ஐந்து நிலை கோபுரமும் பெரிய பிரகாரமும் உடைய இக்கோவிலில் உள்ள இறைவன் விகிர்த நாதேஸ்வரர் என்றும், இறைவி விகிர்த நாதேஸ்வரி என்றும் அறியப்படுகிறார்கள். இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் சுமார் 17 படிகள் கீழிறங்கித் தான் பிரகாரத்தை அடைய முடியும்.
மூலஸ்தானம்
மூலஸ்தானத்தில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் 5 அடி உயரமும், அம்பாளின் உருவச் சிலை 2.5 அடி உயரமும் உள்ளது. இறைவன் விகிர்த நாதேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.
பிரகார அமைப்பு
வெளிப் பிரகாரம் சுவாமி சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டையும் உள்ளடக்கி உள்ளது. உட்பிரகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர் பெருமக்கள். தொடர்ந்து அறுபத்துமூவர். இந்த மூர்த்தங்களின் கீழ் அவரவர் நாடு, மரபு, காலம், நட்சத்திரம் ஆகிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், தொடர்ந்து பஞ்ச லிங்கங்கள், அதையடுத்து வடமேற்குப் பகுதியில் வள்ளி, தெய்வானை உடனாய முருகப்பெருமான் சந்நிதி அமைந்துள்ளது.
அம்பாள் சந்நிதி
அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன. மூலவர் சந்நிதி வாயிற் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழிலும் உள்ள மூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பாகவுள்ளது.
முருகப்பெருமான் சந்நிதி
இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அருணகிரிநாதரின் திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.
கோவில் மறுகட்டுமானம்
ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலும் அழிந்தன. இக்கோயில் கருங்கற்கள் வெள்ளத்தில் 2 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே வெள்ளப் பெருக்கின் நிலைமையை உணரலாம்.
புனரமைப்பு விவரம்
1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தார் இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, பல லட்சங்கள் திரட்டி, திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்து, 26-2-1986 அன்று (குரோதன ஆண்டு மாசி 14 - புதன்கிழமை) மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர்.
தல புராண வரலாறு
இந்திரன் வழிபாடு
தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம்.
சுந்தரருக்கு பொன் வழங்கிய தலம்
சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலும் ஒன்று. சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது.
பதிகம்திருப்புகழ்
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
மேலும் புகைப்படங்கள்






