A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

மணவாளேஸ்வரர் திருக்கோவில், திருவேள்விக்குடி

சிவஸ்தலம்

திருவேள்விக்குடி

இறைவன்

மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்

இறைவி

பரிமளசுகந்த நாயகி

பதிகம்

திருஞானசம்பந்தர் - 1 (திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான பதிகம்), சுந்தரர் - 1 (திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான பதிகம்)

மணவாளேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.

ஆலய முகவரி

அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில்
திருவேள்விக்குடி
குத்தாலம் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609801

ஆலய நேரம்

காலை :  7 மணி முதல் 11 மணி வரை

மாலை :  4 மணி முதல் இரவு 7 மணி

தொடர்பு

04364 235462

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – மணவாளேஸ்வரர் திருக்கோவில், திருவேள்விக்குடி
பரிகாரத் தலம்

இது திருமண தடை நீக்கும் ஒரு பிரார்த்தனை ஸ்தலம் ஆகும்.

மேலும் படிக்க....
தல வரலாறு
உமாதேவி சாப விமோசனம்

ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.

சிவ - பார்வதி திருமணம்

சுய உருவம் பெற்ற அம்பிகை ஈசனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மனலால் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர 17வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.

அரசகுமாரன் திருமண வரம்

அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட அவளின் உறவினர்கள் இத்திருமணத்தை நிறுத்தி விட்டனர். அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்று போன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான். இனைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டு வரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணிற்கும் திருமணம் செய்து வைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு
ராஜகோபுரமும் பிரகாரங்களும்

இங்குள்ள கோவில் 3 நிலையுடன் கூடிய கிழக்கு நோக்கிய இராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் உடையதாய் திகழ்கிறது.

கருவறையும் கோஷ்ட மூர்த்தங்களும்

கருவறைக்கு முன்னே அர்த்த மண்டம், மகாமண்டபம் உள்ளன. இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாள் வலதுபுறமும், இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம்.

அர்த்த மண்டபமும் சிறப்புகளும்

அர்த்த மண்டபத்தில் நடராஜர் மற்றும் விநாயகர் திருஉருவங்கள் இருக்கின்றன. இத்தலத்து இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி பரிமள சுகந்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது. அகத்தியருக்கும் இத்தலத்தில் அர்த்த மண்டபத்தில் தனி சந்நிதி இருக்கிறது. அம்பாள் பரிமளசுகந்த நாயகியின் சந்நிதி முதல் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன.

ஆலயத்தின் தீர்த்தமான கெளதுகா பந்தன தீர்த்தம் ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரே உள்ளது. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கெளதுகா பந்தன தீர்த்தத்தில் நீராடி மணவாளேஸ்வரர் மற்றும் பரிமளசுகந்த நாயகியை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்றது.

பதிகம்
இத்தலம் திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய இருவரின் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையதாகும். திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் 1, சுந்தரர் பாடிய பதிகம் 1 என மொத்தம் 2 பதிகங்கள் உள்ளன. (திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான பதிகங்கள்.)
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற்
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. மூப்பதும் இல்லை பிறப்பதும்
மணவாளேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்