A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

ஆலந்துறையார் திருக்கோவில், திருப்பழுவூர்

சிவஸ்தலம்

திருப்பழுவூர் (தற்போது கீழப்பழுவூர்)

இறைவன்

ஆலந்துறையார், வடமூலநாதர், வடமூலேஸ்வரர்

இறைவி

அருந்தவநாயகி, ஸ்ரீயோக தபஸ்வினி

பதிகம்

திருஞானசம்பந்தர் - 1

ஆலந்துறையார் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

அரியலூர் – திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோவில்
கீழப்பழுவூர்
கீழப்பழுவூர் அஞ்சல்
அரியலூர் வட்டம்
அரியலூர் மாவட்டம்
PIN - 621707

ஆலய நேரம்

காலை :  6:00 - 12:00

மாலை :  4:30 - 8:30

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – ஆலந்துறையார் திருக்கோவில், திருப்பழுவூர்
தல வரலாறு
தலத்தின் சிறப்பு – ஆலமரம் தலமரம்

பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. இவ்வூர் மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் பாடல் பெற்ற சிவாலயம் உள்ளது. இந்த சிவாலயம் ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடனும் காட்சி அளிக்கிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் நந்திதேவர் வீற்றிருக்கிறார். ராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோவிலாகவே காணப்பெறுகிறது. அம்பாள் இங்கு ஸ்ரீயோக தபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தமிழில் இந்த அம்பாளுக்கு அருந்தவ நாயகி என்று பெயர். மகாதபஸ்வினி என்று அம்பிகை துதிக்கப்படுகிறாள். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர். இதன் காரணமாக இத்தலம் யோக வனம் எனப்பட்டது.

கோவில் அமைப்பு

சுவாமியை தரிசிக்க திறந்தவெளி மண்டபம் தாண்டி உள்ள ஒரு வாயில் வழியே உள்ளே சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் உள் பிராகாரத்திற்கான விசாலமான வழிகள் உள்ளன. அடுத்து, இடைமண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஸ்ரீவடமூலநாதர் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சி தருகிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கமானதால் இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது. மிகவும் அரிய தரிசனம் இது. இடை மண்டபத்தின் வலப்புறத்தில், அன்னை இங்கு அருந்தவம் புரிந்ததன் அடையாளமாக தவக்கோலத்தில் இருக்கும் தவசம்மன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள். கருவறை சுற்றில் சப்த ரிஷிகள், உமைபங்கர், சப்தமாதா, காசி விஸ்வநாதர்–விசாலாட்சி, பஞ்சபூத லிங்கங்கள், கஜலட்சுமி, கால சம்ஹார மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

ஆலயத்திற்கு வெளியே தல மரமான ஆலமரம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் கொள்ளிடமும் விளங்குகின்றன. பரசுராமர், தந்தை உத்தரவிட்டதின் பேரில் தன் தாயைக் கொன்ற பழிதீரும் பொருட்டு வழிபட்ட தலம் இதுவாகும். மேலப் பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

தல புராணம்
கல்வெட்டுகளும் வரலாற்றும்

சோழர் வம்சம் முழுவதும் இவ்வாலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் எழுதியிருக்கிறபடியால் அக்காலத்தில் இந்தக் கோயில் மிகவும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். சோழர் சம்பந்திகளாகிய சேரர் கிளையினரைப்பற்றிய கல்வெட்டுக்கள் மேலப்பழூவூரில் காணக் கிடைக்கின்றன. ஆகையால் சேரர் கிளையினர் பழுவூர் வந்த காலத்திலேயே இக்கோயில் பூஜைக்காக மலையாள அந்தணர்களை உடன் கொண்டு வந்துள்ளார்கள். திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மலையாள அந்தணர்கள் அக்காலத்தில் பழுவூரில் வாழ்ந்து வந்தனர் என்பதை தனது பதிகத்தின் 4வது மற்றும் 11வது பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

சம்பந்தர் பதிகம் – பாடல் 4
எண்ணும் ஓர் எழுத்து மிசையின் கிளவி தேர்வார்
கண்ணுமுத லாய கடவுட்கு இடம் இதென்பர்
மண்ணின் மிசையாடி மலையாளர் தொழுது ஏத்திப்
பண்ணினொலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.

எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வார் கருதும் முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர் உலகில் பாடியாடித் தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர்.

சம்பந்தர் பதிகம் – பாடல் 11
அந்தணர்களான மலையாளரவர் ஏத்தும்
பந்தமலி கின்ற பழுவூரரனை யாரச்
சந்தமிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி
வந்தவணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

மலையாள அந்தணர்கள் ஏத்தும் அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச்சந்த இசையால் பாடிய இப்பாடல்களை விரும்பித் தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர்.

ஆலந்துறையார் ஆலயம் புகைப்படங்கள்