A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

திருப்பயற்றுநாதர் திருக்கோவில், திருபயற்றூர்

சிவஸ்தலம்

திருபயற்றூர் (தற்போது திருப்பயத்தங்குடி என்று வழங்குகிறது)

இறைவன்

திருப்பயற்றுநாதர், முக்திபுரீஸ்வரர்

இறைவி

காவியங்கண்ணி அம்மை, நேத்ராம்பிகை

பதிகம்

திருநாவுக்கரசர் - 1

திருப்பயற்றுநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர்ச் சாலையில் சென்றால் மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோவில்
திருப்பயத்தங்குடி
திருப்பயத்தங்குடி அஞ்சல்
வழி கங்களாஞ்சேரி
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 610101

ஆலய நேரம்

காலை :  6:00 - 12:30

மாலை :  4:00 - 8:00

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – திருப்பயற்றுநாதர் திருக்கோவில், திருபயற்றூர்

பரிகாரத் தலம்

கண் நோய் கண் திருஷ்டி நீங்கும் தலம் திருப்பயற்றுநாதர் கோவில், திருபயற்றூர்

ஆலய அமைவும் சந்நிதிகளும்
வெளி பிரகார சந்நிதிகள்

இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் தனியே உள்ளது. வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.

இறைவன் மற்றும் இறைவி சந்நிதி

இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கார்த்திகைச் சோமவார நாட்களில் சுவாமிக்கு விசேஷ ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

கண்திருஷ்டி விலகுதல்

இவ்வாலயத்திலுள்ள பெரிய மண்டபத்தில் உள்ள சோமாஸ்கந்தர் சந்நிதி மிகவும் சிறப்பாகவுள்ளது. பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். இவருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு துர்க்கை கிடையாது. வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

தல வரலாறு
மிளகு பயறாக மாறிய வரலாறு

முன்னொரு காலத்தில் சிவபெருமானிடத்தே பேரன்பு கொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடல் மூலம் சரக்கை ஏற்றுமதி செய்ய கடல்துறை நோக்கி இத்தலத்தின்வழியே செல்லும்போது சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக்கண்டார். அந்நாளில் மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும் வழக்கம் இருந்தது, ஆனால் பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை. வணிகர் இத்தலத்தின் பெருமானையடைந்து, தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார். மறுநாள் காலை மிளகு மூட்டைகள் எல்லாம் பயறு மூட்டைகளாக மாறி இருப்பதைக் கண்டார். சுங்கச்சாவடி கடந்ததும் அவை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின. வணிகர் பெற்ற இலாபத்தை சிவன் சேவைக்கு செலவு செய்தார். இதனால் இத்தலம் "திருப்பயற்றூர்" எனவும், இறைவன் "திருப்பயற்றுநாதர்" எனவும் அழைக்கப்படுகிறார்.

கண் நோய் நீங்கிய வரலாறு

இத்தல கல்வெட்டு ஒன்றின்படி திருப்பயற்றூரில் வாழ்ந்து வந்த பஞ்சநதவாணன் என்பவன் கண் நோயால் வருந்திய போது, அவன் கண் நன்றாகும்படி இத்தல இறைவனை வேண்டிக் கொண்டு, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாயுள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர். ஆகையால் யாருக்கேனும் கண் நோய் இருப்பின், இத்தலத்தினை அடைந்து கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும், திருப்பயற்றுநாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகின்றது.

கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகையையும், திருப்பயற்றுநாதரையும் வழிபடுவோர்க்குக் கண் நோய் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. கல்வெட்டுச் சான்று மூலம் உறுதி செய்யப்பட்ட இப்பழக்கம் இன்றும் தொடர்கிறது.

பதிகம்
திருநாவுக்கரசர்
  1. உரித்திட்டார் ஆனை
திருப்பயற்றுநாதர் ஆலயம் மேலும் புகைப்படங்கள்