A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

ஞானபரமேஸ்வரர் திருக்கோவில், திருநாலூர் மயானம்

சிவஸ்தலம்

திருநாலூர் மயானம்

இறைவன்

ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்

இறைவி

ஞானாம்பிகை, பெரியநாயகி

பதிகம்

திருஞானசம்பந்தர் - 1

ஞானபரமேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். இவ்வூர் ஒரு தேவார வைப்புத் தலம். நாலூர் தாண்டி குடவாசல் செல்லும் வழியில் உள்ள அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. குடவாசல் தலத்தில் இருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஜூலை 2026 இல் நாங்கள் மேற்கொண்ட பயணத்தின் போது, மாலை நேரத்தில் இத்திருக்கோவிலுக்குச் சென்றபோது கோவில் மூடப்பட்டிருந்தது. எங்களுடன் வந்த வாடகை கார் ஓட்டுநர், இதே பெயரில் அருகிலுள்ள மற்றொரு தேவார வைப்பு ஸ்தலத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். இத்தலத்திற்கு செல்லும் முன் கோவில் திறந்திருக்கும் நேரம் குறித்து தொடர்புகொண்டு உறுதி செய்து செல்வது நல்லது.

ஆலய முகவரி

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
நாலூர் மயானம்
திருச்சேறை அஞ்சல்
திருமெய்ஞானம்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612605

ஆலய நேரம்

காலை :  7:00 - 9:00

தொடர்பு

திரு கலியமூர்த்தி (கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்) குடும்பத்தினர்

9486767962, 7502056284

காலை 7 மணி முதல் 9 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும். மற்ற நேரங்களில் கோவில் அருகில் வசிக்கும் திரு கலியமூர்த்தி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தரிசிக்கலாம்.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – ஞானபரமேஸ்வரர் திருக்கோவில், திருநாலூர் மயானம்
ஆலயச் சிறப்பும் வரலாறும்
மயான தலங்கள் சிறப்பு

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நான்கு தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன - 1) நாலூர் மயானம், 2) திருக்கடவூர் மயானம், 3) காழி மயானம், 4) கச்சி மயானம். இவற்றில் முதல் மூன்றும் பாடல் பெற்ற தலங்கள். நான்காவது கச்சி மயானம் ஒரு தேவார வைப்புத் தலம்.

தல வரலாறு

கும்பகோணம் - திருச்சேறை - குடவாசல் வழித்தடத்தில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். இது ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். நாலூர் என்ற இந்த ஊரைக் கடந்து அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருமெய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள ஞானபரமேஸ்வரர் திருக்கோவிலே திருநாலூர் மயானம் என்று திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாடல் பெற்ற தலம். நான்கு வேதங்களாலும் வழிபடப்பட்ட இத்தலம் சோழர் காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று வழங்கியது.

கோவில் அமைப்பு
சந்நிதிகள்

சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இககோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது. பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர், ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. அதையடுத்து நாகாராஜா, சண்டிகேஸ்வரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் காணலாம். நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.

மூலவர் சந்நிதி

பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர், நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பைப் பெற்ற தலம். இறைவன் கருவறை விமானம் உருண்டை வடிவத்திலுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.

பதிகப் பெருமை

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இத்தல இறைவனின் திருமேனி மேல் பாம்பு ஊர்வதாகக் கூறி, அதற்கு ஞானசம்பந்தரின் பதிகத்தின் முதல் பாடலில் வரும் "பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான்" என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியைக் காட்டுவர்.

பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான் தன் அடிநினைந்து
மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா மறுபிறப்பே.

பதிகம்
திருஞானசம்பந்தர்
  1. பாலூரும் மலைப்பாம்பும்
ஞானபரமேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

மூலவர் ஞானபரமேஸ்வரர் மற்றும் அம்பாள் ஞானாம்பிகை புகைப்படங்கள் அனுப்பி உதவியவர் நாலூர் மயானம் கிராமத்தைச் சார்ந்த செல்வி அனுசுயா கலியமூர்த்தி அவர்கள்