அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோவில், கச்சி அநேகதங்காபதம்
சிவஸ்தலம் பெயர்: கச்சி அநேகதங்காபதம்
இறைவன் பெயர்: அநேகதங்காபதேஸ்வரர்
இறைவி பெயர்: காமாக்ஷி
பதிகம்: சுந்தரர் - 1
அநேகதங்காபதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் சுற்றுலா மையமான பிரபல கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன.
முக்கிய குறிப்பு
கச்சி அநேக தங்காவதத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே (காலை 9 மணி முதல் 10 மணிக்குள்) நடை பெறுகிறது. விநாயக பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவ லிங்கம், திருமண தடை நீக்கும் இத்தலம், மேலும் பல சிறப்புகள் பெற்ற இந்த பாடல் பெற்ற திருத்தலம் போதிய பக்தர்கள் வருகை தராத காரணத்தால் இந்த கோவில் சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுவதில்லை.
ஆலய முகவரி
பிள்ளையார்பாளயம்
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631501
கோவில் நேரம்
காலை: 6:00 AM - 12:00 PM
மாலை: 4:00 PM - 6:00 PM
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்) - 1.6 கிமீ | |
| 3 | திருக்கச்சி மேற்றளி - 1.4 கிமி | |
| 2 | ஓணகாந்தன்தளி - 3 கிமி | |
| 4 | கச்சி நெறி காரைக்காடு - 3.7 கிமீ |
அருகில் உள்ள தேவார வைப்புதலங்கள்
| 1 | கச்சி மயானம் - ஏகாம்பரநாதர் கோயில் உள்ளேயே அமைந்துள்ளது. |
| 2 | ஶ்ரீ கச்சபேஷ்வரர் திருக்கோவில், கச்சிப் பலதளி |
பயண குறிப்புகள்
தொண்டை நாடு காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பாடல் பெற்ற தலங்கள் அனைத்தும் அருகே அருகே அமைந்து இருப்பதால், அரை நாளில் 5 கோவில்களையும் தரிசனம் செய்யலாம். காலையில் முதலில் கச்சி அநேகதங்காவதம், மற்றும் திருக்கச்சி மேற்றளியில் தரிசனம் முடித்த பிறகு பஞ்சுபேட்டை சென்று ஓணகாந்தன்தளியில் தரிசனம் செய்யலாம். இறுதியாக, கச்சி ஏகம்பம் ஏகாம்பரநாதரையும் கடைசியில் கச்சி நெறி காரைக்காடு சென்று தரிசனம் நிறைவு செய்யலாம்.
தல வரலாறு
அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் - கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சீபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.
தலப் பெயரின் தோற்றம்
அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம் ஆதலால் இது அநேகதங்காபதம் என்று பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு
இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும், கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. இந்த வாயிலகள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது.
பிரகாரம் மற்றும் சந்நிதிகள்
கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் நாம் நேரே காண்பது பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவார மூவர் சந்நிதியைக் காணலாம். மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம்.
மூலவர் சந்நிதி
மூலவர் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் நமக்கு அருட்காட்சி தருகிறார். கோஷட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர்.
சிறப்பு
குபேரன் வழிபட்ட பெருமையுடையது இத்தலம். அநேகதங்காபதேஸ்வரர் இரணியபுர அசுரரான கேசியை அழித்து கேசியின் மகளான சிவபக்தை வல்லபையை விநாயகருக்கு மணம் முடிக்க வரம் தநத சிறந்த தலமாகும்.
காஞ்சிப் புராண குறிப்பு
விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.
பதிகம்
சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
மேலும் புகைப்படங்கள்