தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
அளப்பூர் (தரங்கம்பாடி) மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில் - வைப்புத் தலம்

சிவஸ்தலம் பெயர்: அளப்பூர் (இன்றைய நாளில் தரங்கம்பாடி என்று வழங்குகிறது)

இறைவன் பெயர்: மாசிலாமணி ஈஸ்வரர்

இறைவி பெயர்: தர்மசம்வர்தினி

பதிகம்: அப்பர் (6-51-3, 6-70-4, 6-71-4), சுந்தரர் 7-47-4

மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. கடற்கரை அருகில் இக்கோவில் உள்ளது. தரங்கம்பாடியில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் திருக்கடவூர் பாடல் பெற்ற தலம் இருப்பதால், அங்கு தங்கும் வசதிகள் நிறைய உள்ளன.

ஆலய முகவரி
அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில்
தரங்கம்பாடி
தரங்கம்பாடி அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 609313
வரைபடம் - அளப்பூர் (தரங்கம்பாடி) மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில்
சிறப்புக் குறிப்பு

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வைப்புத் தலப் பாடல்களில் கூறப்பட்டுள்ள ஏமகூடம் , பேராவூர், எச்சில் இளமர், ஏமநல்லூர், இறையான்சேரி, ஆறை, கச்சிப்பலதளி, பேராவூர், நல்லாற்றூர், சேற்றூர், ஊற்றத்தூர், துவையூர், தோழூர், துடையூர், பேரூர் ஆகியவையும் வைப்புத் தலங்களாகும். பாரூர் என்பதும் வைப்புத்தலத்தின் பெயர் என்பார் உளர்.

கோவில் அமைப்பு

அளப்பூரிலுள்ள மாசிலாமணி ஈஸ்வரர் கோயில் கி.பி. 1305-ம் ஆண்டு மாறவர்ம குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த இக்கோவில் கடலின் தொடர் சீற்றத்தால் மிகவும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது தொல் பொருள் ஆய்வு துறையின் பராமரிப்பில் இருக்கிறது. கடலின் சீற்றத்தால் இக்கோவில் மேலும் மேலும் பழுதடைவதைத் தடுக்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறை கோயிலை ஒட்டியும், கடலுக்குள் 50 மீட்டர் நீளத்திற்கும் கருங்கல்கள் கொட்டும் பணியை செய்துள்ளது. கோயிலின் பின்புறம் 26 லட்சத்தில் 10 சன்னதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், பழைய சந்நிதியை 3.5 லட்சத்தில் சீரமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்வெட்டுகளில் இத்தலம் குலசேகரன்பட்டிணம், சடகம்பாடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தசஷ்டி தாளில் திருவிடைக்கழி கோவிலில் இருந்து முருகப்பெருமான் இவ்வூருக்கு எழுந்தருளி சம்ஹாரம் செய்வார். திருவிடைக்கழி கோவிலின் அம்மன் இக்கோவிலில் விளங்குகிறார்.

பதிகம் குறிப்பு - 1

இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 3-வது பாடல், 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 4-வது பாடல், 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடல், மற்றும் சுந்தரரின் 7-ம் திருமுறையில் 47-வது பதிகத்தில் 4-வது பாடல் ஆக 4 பாடல்களில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளன.

பதிகப் பாடல் (6-51-3)
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணாழிகையார் உமையாளோடும்
இமையோர் பெருமானார் ஒற்றியூரார்
பெண்ணாகடத்துப் பெருந் தூங்கானை
மாடத்தார் கூடத்தார் பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த
வீழிமிழலையே மேவினாரே.
பொழிப்புரை

இமையோர் பெருமானார் உமையாளோடும் தேவர்கள் எல்லோரும் விரும்பித் துதிக்க அண்ணாமலை, ஆரூர், அளப்பூர், அந்தணர்கள் மிக்க வைகல், மாடக்கோயிலின் மூலத்தானம், ஒற்றியூர், பெண்ணாகடத்துத் தூங்கானை மாடம், ஏமகூடம், பேராவூர் இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்து அடைந்தார்.

பதிகம் குறிப்பு - 2

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

பதிகப் பாடல் (6-70-4)
எச்சிலிளமர் ஏமநல்லூர்
இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி
அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர்
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை
கைச்சினம் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப்பலதளியும் ஏகம்பத்துங்
கயிலாய நாதனையே காணலாமே.
பொழிப்புரை

எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங் கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதுறை, அழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக் கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப்பலதளி, ஏகம்பம். இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.

பதிகம் குறிப்பு - 3

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

பதிகப் பாடல் (6-71-4)
பிறையூரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா வன்றே.
பொழிப்புரை

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர்,, ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

பதிகம் குறிப்பு - 4

திருநாவுக்கரசரின் 7-ம் திருமுறையில் 47-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

பதிகப் பாடல் (7-47-4)
ஆரூர் அத்தா ஐயாற்றறு அமுதே 
அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்
கருகாவூரானே
பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான்
பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய்
பாசூர் அம்மானே.
பொழிப்புரை

ஆரூர், அளப்பூர், பேரூர், கருகாவூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, அமுதம் போல்பவனே, பிறவாத நெறியை உடையவனே, நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன்.

மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்