Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பாலுகந்த ஈஸ்வரர் கோவில், திருஆப்பாடி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஆப்பாடி
இறைவன் பெயர்பாலுகந்த ஈஸ்வரர்
இறைவி பெயர்பெரியநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - அணைக்கரை மர்க்கத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்பனந்தாள் அருகில் தென்மேற்கே சுமார் 2 கி.மி. தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் திருஆப்பாடி சிவஸ்தலம் இருக்கிறது. ஆலயம் பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி இருப்பதால் திருப்பனந்தாளில் இருந்து ஆட்டோவில் வருவது நல்லது. நேரமும் மிச்சமாகும்.
ஆலய முகவரி அருள்மிகு பாலுகந்த ஈஸ்வரர் திருக்கோவில்
திருஆப்பாடி
திருப்பனந்தாள் அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612504

இவ்வாலயம் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலப்பெருமை: மண்ணியாற்றின் தென்கரையில் விளங்கும் இத்தலம் சண்டேசுவர நாயனார் பசுக்களை மேய்த்த இடத்தில், ஆத்திமர நிழலில், வெணமணலையே சிவலிங்கமாகப் பிடித்து வைத்து பூசித்து அருள்பெற்ற சிறப்புக்குரிய தலமாகும். சண்டேசுவரர் ஆக்களை (பசுக்களை) மேய்த்த இடமாதலால் இத்தலம் ஆப்பாடி எனப்பட்டது.

சண்டேசுவர நாயனார் வரலாறு: ஆப்பாடிக்கு அருகிலுள்ள சேய்ஞலூரில் எச்சதத்தன், பவித்திரை என்ற அந்தண தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விசாரசர்மர். சிறு வயதிலேயே வேதாகமங்களையும், கலை ஞானங்களையும் ஓதி உணர்ந்தவரானார். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவர்களுடன் பசுக்கள் மேய்க்கச் சென்ற இடத்தில் விசாரசர்மர் விளையாடிக்கெண்டு இருந்தார்.அப்போது ஒருபசு தன்னை மேய்க்கும் இடையனைக் கொம்பினால் முட்டப் போயிற்று. இடையன் தன் கையிலுள்ள அப்பசுவை அடித்தான். விசாரசர்மரை அவனைக் கண்டித்து, அவ்வூர் வேதியர்களின் இசைவுடன் ஆநிரைகளை மேய்த்தலை மேற்கொண்டார். விசாரசர்மரால் அன்பாக மேய்க்கப்பட்ட ஆநிரைகள் அதிகமான பாலைச் சொரிந்தன. அவ்வூர் வேதியர்களும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர்.

பசுக்களின் பால் வளமுடன் பெருகி வருவதைக் கண்ட விசாரசர்மர், அதிகப்படியான பாலைக் கொண்டு சிவனுக்கு திருமஞ்சனம் செய்யும் ஆசை கொண்டார். மண்ணியாற்றின் கரையில்ஓர் மணல் மேட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை அவ்வாற்று மணலால் அமைத்தார். பசுவின் பாலால் அபிஷேகம் செய்தார். ஒருவன் அவ்வூருக்குள் சென்று, பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசர்மர் பாலை வீணாக்கி தரையில் கொட்டுகிறான் என்று பழி கூறினான். விசாசரசர்மரின் தந்தையிடம் பசுவின் சொந்தக்காரர்கள் இதனை முறையிட்டனர். எச்சதத்தரும் இதனை விசாரித்து மகனை தண்டிப்பதாகக் கூறினார். மறுநாள் விசாரசர்மர் பசுக்களை மேய்க்கச் செல்லும் போது எச்சதத்தரும் அவனறியாமல் பின் தொடர்ந்தார். ஊர் மக்கள் கூறியபடியே மணல் லிங்கத்திற்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்வதைப் பார்த்தார். விசாரசர்மரை தன் கையிலிருந்த கோலால் அடித்தார். விசாரசர்மரின் மனதும், சிந்தனையும் சிவபூஜையிலேயே லயித்திருந்ததால் அப்பா கோலால் அடித்த அடி உரைக்கவில்லை. சிவபூஜையை தொடர்ந்து செய்வாரானார். அதைக் கணட எச்சதத்தர் கடுஞ்சினம் கொண்டு பாற்குடங்களை தன் காலால் எட்டி உதைத்தார். பூஜைக்கு இடையூறு செய்பவர் தன் தந்தை என்று தெரிந்தும் அது சிவ அபராதமாகையால் தன்முன் இருந்த கோலை எடுத்து தன் தந்தையின் கால்களை நோக்கி வீசினார். கோல் மழுவாக மாறி அவரது தந்தையின் கால்களை வெட்டியது. எச்சதத்தர் உயிர் நீத்தார். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விசாரசர்மர் தன் பூஜையைத் தொடர்ந்தார். விசாரசர்மரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் காட்சி கொடுத்து நாமே உனக்கு இனி தந்தையானோம் என்று கூறி அருள் புரிந்து விசாரசர்மரை தன் மார்போடு அணைத்துக் கொண்டார். விசாரசர்மரை தன் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக்கினார். தான் உண்ட அமுதும், பரிவட்டம் மற்றும் மாலைகள் யாவும் உனக்கே ஆகுக என்று உரிமையாக்கி சண்டீசர் என்ற பதவியும் தந்து தன் சடைமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து விசாரசர்மருக்கு சூட்டினார். விசாரசர்மர் சண்டேச நாயனார் ஆனார். சண்டீசப் பதமும் பெற்றார்.

அப்பர் பெருமான் இத்தலத்திற்கான தனது பதிகத்தின் 4-வது பாடலில் இவ்வரலாற்றை குறிப்பிடுகிறார்.

அண்டமா ரமரர் கோமா னாதியெம் மண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் றாப ரத்தைக்
கண்டவன் றாதை பாய்வான் காலற வெறியக் கண்டு
தண்டியார்க் கருள்கள் செய்த தலைவராப் பாடி யாரே.
   
பொழிப்புரை :
எல்லா உலகங்களுமாய், தேவர் தலைவராய், எல்லோருக்கும் ஆதியாய் உள்ள
அண்ணலாரின் திருவடிகளை மனத்துள்கொண்டு, அப்பெருமான் குறிப்பினாலே
மணலால் விசாரசருமன் இலிங்க வடிவத்தை அமைத்து பூஜை செய்ய, 
அதனைக் கண்ட அவன் தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசையை அழிக்க ஓடிவர, 
விசாரசருமன் அவன் கால்களை வெட்டியதனைக் கண்டு அவனுக்குச் 
சண்டீசன் என்ற பதவியை அருளிச் செய்தவர் திருவாப்பாடிப் பெருமானாவார்.

இத்தலத்தைக் குறித்த மற்றொரு வரலாறும் உண்டு. ஆப்பாடியில் இருந்த இடையர்குலத் தோன்றல் ஒருவன் பாலைக் கறந்து குடத்தைத் தன் வீட்டிற்கு எடுத்துச்செல்லும்போது வழியில் நாடோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் தடுக்கிப் பாற்குடம் கவிழ்ந்து கொண்டு வருதலை அறிந்து அவ்விடத்தைச் சினங்கொண்டு கையிலிருந்த அரிவாளால் வெட்டினான். அவ்விடத்திலிருந்து இரத்தம் பெருகியது. குருதிபடிந்த திருமேனியுடன் சிவலிங்கத் திருவுருவில் இறைவன் வெளிப்பட்டு அருளினார். இவ்வதிசயத்தைக் கண்ட இடையன் தன் அறியாமையால் ஏற்பட்ட செயலை எண்ணி மனம் வருந்தினான். அவனது வருத்தந்தணித்து இறைவன் இன்னருள் புரிந்தார் என்பது வரலாறு.

கோயில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலன் மேற்புறத்தில் ரிஷப வாகனத்தில் அம்மையும், அப்பனும் உள்ளனர். அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வாயில் வழி உள்ளே நுழைந்து முதல் பிரகாரத்தை அடையலாம். இங்கு நந்தவனமும், வடகிழக்கு மூலையில் பஞ்சமூர்த்தி மண்டபமும் உள்ளது. பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் கடந்து முன் மண்டபத்தை அடையலாம். இம்மண்டபம் வெவ்வால் நெற்றி அமைப்புடையது. மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. உட்பிரகாரம் நுழைந்து வலம் வரும்போது தென்மேற்கு மூலையில் தலமரமான ஆத்திமரம் உள்ளது. ஆத்திமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த ஆத்திமர நிழலில் தான் அன்று சண்டேசர் இத்தல இறைவனை ஸ்தாபித்து வழிபட்டார் என்ற நினைப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை மேற்குப் பிரகாரத்தில் நால்வர், முருகர், மகாலட்சும் ஆகோயோரின் திருவுருவங்கள் உள்ளன. எல்ல சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை இருத்தி வழிபடும் முறையில் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் மட்டும் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பம்சம்.

சிவபூஜை பயனை, சிவாலய தரிசனப் பயனை நல்கும் சண்டேசுவர பதத்தைப் பெற்ற பெருமான் விசாரசர்மர் வழிபட்ட திருஆப்பாடியைச் சென்று வழிபடுவதும், அக்கோயில் நன்றாக விளங்க ஆவன செய்ய வேண்டியதும் நம் கடமை. உள்ளூர் கிராம மக்கள் கோயிலுக்கு வருவதாகவே தெரியவில்லை.

திருஆப்பாடி பாலுகந்த ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

நந்தி, பலிபீடம்

பைரவர்

சுவாமி சந்நிதி செல்லும் வழி

அம்பாள் சந்நிதி செல்லும் வழி

முகப்பு வாயில்

சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி

தல விருட்சம்

சுவாமி சந்நிதி விமானம்
திருஆப்பாடி ஆலயத்தின் சில புகைப்படங்களை அனுப்பி உதவியவர் சேலத்தைச் சார்ந்த திரு விவேக் அவர்கள்

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 4-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

1. கடலகம் ஏழி னோடும் புவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரும் ஒள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே. 

2. ஆதியும் அறிவு மாகி அறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப்
பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க னாகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே. 

3. எண்ணுடை இருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்க னாகிக்
கண்ணொரு நெற்றி யாகிக் கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப் பேணும் ஆப்பாடியாரே. 

4. அண்டமார் அமரர் கோமான் ஆதியெம் அண்ணல் பாதங்
கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் தாப ரத்தைக்
கண்டவன் தாதை பாய்வான் காலற எறியக் கண்டு
தண்டியார்க் கருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே. 

5. சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித்தென் கரைமேல் மன்னி
அந்தமோ டளவி லாத அடிகள் ஆப்பாடியாரே. 

6. வன்னிவா ளரவு மத்தம் மதியமும் ஆறுஞ் சூடி
மின்னிய உருவாஞ் சோதி மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக் கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே. 

7. உள்ளுமாய்ப் புறமு மாகி உருவுமாய் அருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர் ஞாயி றாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் கருத்துமாய் அருத்த மாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட் டிருந்த ஆப்பாடியாரே. 

8. மயக்கமாய்த் தெளிவு மாகி மால்வரை வளியு மாகித்
தியக்கமாய் ஒருக்க மாகிச் சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கமாய் இறுதி யாகி எண்டிசைக் கிறைவ ராகி
அயக்கமாய் அடக்க மாய ஐவர் ஆப்பாடியாரே. 

9. ஆரழல் உருவ மாகி அண்டமேழ் கடந்த எந்தை
பேரொளி உருவி னானைப் பிரமனும் மாலுங் காணாச்
சீரவை பரவி யேத்திச் சென்றடி வணங்கு வார்க்குப்
பேரருள் அருளிச் செய்வார் பேணும் ஆப்பாடியாரே. 

10. திண்டிறல் அரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை
எண்டிறல் இலனு மாகி எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்டிறல் நெறிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட்டு கந்த பரமர் ஆப்பாடியாரே.