Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருந்துதேவன்குடி (தற்போது நண்டாங் கோயில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்கற்கடேஸ்வரர், தேவதேவேசர்
இறைவி பெயர்அருமருந்துநாயகி, அரவிந்தநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்திற்கும் சூரியனார் கோவிலுக்கும் இடையில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 Km தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது.


தற்போது நண்டாங் கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் துவாரத்தில் 21 குடம் காராம்பசு பாலை அபிஷேகித்தால் நண்டு வெளிப்படும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் ஒரு நிறப்பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.

முதலில் செங்கல்லால் கட்டபட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் தற்போது நன்கு பராமரிக்கப் படாமல் காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் இறைவிக்கு இரண்டு சந்நிதிகள் இருக்கின்றன. ஒரு சந்நிதியில் அருமருந்துநாயகியும், மற்றொரு சந்நிதியில் அரவிந்தநாயகியும் வீற்றிருந்து அருள் பாவிக்கிறார்கள். அம்பாள் அருமருந்து நாயகிக்கு அபிஷேகம் செய்து தரப்படும் தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் தீர்கின்றன என்று நம்பப்படுகிறது. கோவிலில் இந்த அபிஷேக தீர்த்தம் விலைக்கு விற்கப்படுகிறது.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான் யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம்

மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.  

வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.  

மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.  

செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.  

விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி
மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே.  

பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.  

கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே. 

உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.  

துளக்கமில் லாதன தூயதோற் றத்தன
விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.  

செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.  

சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.