Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
சிவயோகிநாத சுவாமி கோவில், திருவியலூர் (திருவிசைநல்லூர்)
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவியலூர் (தற்போது திருவிசநல்லூர் என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | சிவயோகிநாத சுவாமி, வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்நரர் |
| இறைவி பெயர் | சௌந்தரநாயகி, சாந்தநாயகி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோவில் செல்லும் வழியில் திருவிசநல்லூர் உள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான திருவிடைமருதூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வேப்பத்தூர் செல்லும் வழியில் மேற்கில் 8 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் திருந்துதேவன்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவியலூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. |
| ஆலய முகவரி | அருள்மிகு சிவயோகிநாத சுவாமி திருக்கோயில் திருவிசலூர் திருவிசலூர் அஞ்சல் வழி வேப்பத்தூர் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612105 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நாம் காண்பது கொடிமர விநாயகர், பலீபீடம், நந்தி, அதன் பின் கொடிமரம் உள்ளது. சிவாலயங்களில் முதலில் கொடிமரமும் அதன் பின நந்தி இருப்பது வழக்கம். இங்கு மாறி இருக்கிறது. வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. உள் வாயிலைக் கடந்து சென்றால் இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. கருவறை தேவ கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை மேற்குச் சுற்றில வள்ளி தெய்வானையுடன் முருகர் சந்நிதி உள்ளது. பஞ்சலிங்கங்கள், ஸ்தல விநாயகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.
சுவாமி சந்நிதிக்கு தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் சந்நிதியும் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது. இங்கே லட்சுமியை தன் மடியில் அமர வைத்துக் கொண்டு லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். இந்த ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாளை, அவரின் ஜென்ம நட்சத்திரமான் திருவோணத்தன்றும், சிரவணம், ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து துன்பங்களும் விலகும், திருமணத் தடை விலகும், மேலும் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்.
இத்தலத்திலுள்ள சதுர்கால பைரவர் சந்நிதியும் மிக விசேஷமானது. யுகத்திற்கு ஒரு பைரவராக நான்கு பைரவர் காட்சி தருகிறார். வளர்பிறை, தேய்பிறை அஷ்டதி திதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்திலும் மிளகு தீபம் ஏற்றி சதுர்கால பைரவர் சந்நிதியில் வழிபடுவது மிகவும் நல்லது.
கிருத்திகை, ரோஷ்ணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த ரிஷப ராசிக்காரர்களும், மற்றும் ரிஷக லக்னத்தில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள மிகச் சிறந்த தலம் இதுவாகும்.
சூரிய கடிகாரம்: கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு அதைச்சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுனர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
தன் வீட்டு கிணற்றில் கங்கையை பெருகி வரச் செய்த ஸ்ரீதர அய்யாவாள் பிறந்த தலம் என்ற் பெருமையுடையது திருவிசநல்லூர் திருத்தலம்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன் அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும் விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான் ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான் மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள் வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம் உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல் விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில் மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங் கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க் கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம் விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான் திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள் விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே. மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம் ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள் தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம் மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன் கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின் விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால் அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல் உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம் விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப் பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர் கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத் தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன் துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும் விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.
