Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

செஞ்சடையப்பர் கோவில், திருப்பனந்தாள்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பனந்தாள்
இறைவன் பெயர்செஞ்சடையப்பர்
இறைவி பெயர்பிரஹந்நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. தாடகைஈச்சரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
Tiruppanandal route map

திருப்பனந்தாள் வரைபடம்

கோவில் அமைப்பு: மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப் பக்கத்தில் ஸ்தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்கிறது.

தல வரலாறு: அசுரகுல மகளான தாடகை என்பவள் (ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். இப்படி தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் குடி கொண்டிருக்கும் இத்தலம் தாடகைஈச்சரம் என்றே அழைக்கப்படுகிறது.

தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன் முதலானோர் எவ்வளவோ முயன்றும் சிவபெருமானின் தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் வந்து இறைவன் சடைமுடிக்கும் தம் கழுத்திற்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் அவரின் தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார். குங்கிலியக் கலயரின் மகன் இறந்துவிட அந்த உடலை தகனம் செய்ய எடுத்துப் போகும் போது வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். வீடு சென்ற பின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான். இத்தகைய பெருமைகள் பெற்றது திருப்பனந்தாள் சிவஸ்தலம்.

அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் இருபுறமும் வள்ளி தேவசேனாதேவி சமேதராக கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். ஒரு உற்சவர் மூலவரைப் போன்றும் மற்றொரு உற்சவரான முத்துக்குமாரசாமி மயிலின்றியும் காட்சி தருகின்றனர்

திருப்பனந்தாள் தலத்திற்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகம். பதிகத்தில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறைபேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமோர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்கமாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 

விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன்எம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரைபன்மணியுங் கொணருந்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

விடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெருக் கும்மணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

மலையவன் முன்பயந்த மடமாதையோர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

செற்றரக் கன்வலியைத் திருமெல்விரலால் அடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
புற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமுந்
தற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

வின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

ஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும்
நீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.  

தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையான் அவன்றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகுஞானசம் பந்தன்நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே.