கொடுங்குன்றநாதர் கோவில், கொடுங்குன்றம்
சிவஸ்தலம் பெயர்: திருகொடுங்குன்றம் (தற்போது பிரான்மலை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்: கொடுகுன்றநாதர் (மலையின் கீழ்), காசி விஸ்வநாதர் மற்றும் வடுக பைரவர் (மலையின் நடுவில்), மங்கை பாகர் (மலை உச்சியில்)
இறைவி பெயர்: குயிலமுத நாயகி (மலையின் கீழ்), காசி விசாலாட்சி (மலையின் நடுவில்), தேனம்மை (மலை உச்சியில்)
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1
கொடுங்குன்றநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
மதுரையில் உள்ள மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பொன்னமராவதி செல்லும் பேருந்துகள் பிராமன்மலை வழியாகச் செல்கின்றன. மதுரையிலிருந்து சிங்கம்புணரி, மேலூர் ஆகிய ஊர்களுக்குச் சென்றால் அங்கிருந்து பிரான்மலைக்குப் பேருந்துகள் உள்ளன.
கவனத்தில் கொள்ளவும்:
- பிரான் மலை செல்லும் வழி தடத்தில் மணிக்கு ஒரு பேருந்து வசதி மட்டுமே உள்ளது.
- அருகில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற தலமான திருப்பத்தூர் செல்ல, பிரான்மலையில் ஏறி பொன்னமராவதி சென்று அங்கிருந்து திருப்பத்தூர் அடையலாம்.
ஆலய முகவரி
பிரான்மலை அஞ்சல்
சிவகங்கை மாவட்டம்
PIN – 624503
ஆலய நேரம்
காலை: 6:00 – 12:00 PM
மாலை (மங்கைபாகர் & வடுகபைரவர்): 4:00 – 6:30 PM
மாலை (கொடுங்குன்றநாதர்): 4:00 – 8:00 PM
தல சிறப்பு
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோயில்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று திருக்கொடுங்குன்றம் என்றழைக்கப்படும் பிரான்மலை ஸ்ரீ கொடுங்குன்ற நாதர் ஆலயமாகும்.
மலையின் தோற்றம்
ஒருசமயம் வாயு, ஆதிசேஷனுக்கிடையே தங்களில் யார் பலசாலி என்ற சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். ஆதிசேஷன் மேருமலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பது போட்டி. காற்று பலமாக வீசியதில், மேருமலையிலிருந்து சில துண்டுகள் பெயர்ந்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு துண்டே, இங்கே மலையாக திருக்கொடுங்குன்றம் என்ற பெயரில் உள்ளது.
பாரி வள்ளல் நாடு
கடையேழு வள்ளல்களுள் ஒருவனும், முல்லைக்குத் தேர் ஈந்தவனுமான பாரி வள்ளல் ஆட்சி செய்த இடம் இப்பகுதி. அக்காலத்தில் இப்பகுதி பறம்பு நாடு என்றும் இம்மலை பறம்பு மலை என்றும் அழைக்கப்பட்டது.
எம்பிரான் மலை - பிரான்மலை
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டு தலங்களை தரிசிக்கும் முன், வேதாரண்யத்தில் திருநாவுக்கரசர் உடன் இருந்தார். அங்கிருந்து கிளம்பும் முன், பிரான்மலை சிவ லிங்கமாக அவருக்கு காட்சி அளித்தது. இதனால், அவர் அந்த மலையை எம்பிரான் மலை (சிவபெருமான் மலை) என்று அழைத்தார். இன்று காலப்போக்கில் எம்பிரான் மலை மருவி 'பிரான்மலை' ஆகிவிட்டது.
கோயில் அமைப்பு
மூன்று நிலை கோவில்: மலை அடிவாரம், மலையின் நடுப்பகுதி, மலை உச்சி ஆகிய மூன்று நிலைகளிலும் சந்நிதிகள் கொண்டு காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான்.
1. மலை உச்சி - மங்கைபாகர் சந்நிதி
மலை உச்சியில் மங்கைபாகர் என்னும் பெயரில் ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். மங்கைபாகருக்கு உமாமகேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. இறைவி தேனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள்.
சிறப்பு அம்சங்கள்
- நந்தி இல்லை: சிவன், அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் கைலாயத்தில் இருந்தார். எனவே, சிவன் இங்கு நந்தி இல்லாமல் காட்சி தருகிறார்.
- கொடிமரம், பலிபீடம் கிடையாது
- நவ மூலிகை சிலை: சிலை நவ மூலிகைகளின் சாறு கொண்டு செய்யப்பட்டதாகும். எனவே, இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை.
- புது வஸ்திரம்: ஒவ்வொரு முறையும் இவருக்கு புத்தாடையையே அணிவிக்கின்றனர்.
- வேதசிவன்: கையில் வேதங்களுடன் காட்சி தருவதால் இவருக்கு "வேதசிவன்" என்றும் பெயருண்டு.
2. மலை நடுப்பகுதி - வடுக பைரவர் சந்நிதி
மலை நடுப்பகுதியில் உள்ள கோவிலில் மிக முக்கியமான சந்நிதியாய் விளங்குவது பைரவர் சந்நிதியாகும். இங்குள்ள பைரவர் வடுக பைரவராய் எழுந்தருளியிருக்கிறார். வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது.
முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப்படுத்தினான். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவர் ஆகும்.
வழிபாடு: ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் களைபவர் இத் தலத்து பைரவர். கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து இவரிடம் வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும்.
பைரவருக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி எழுந்தருளியுள்ளனர். வடுக பைரவர் தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் உள்ளன.
3. மலை அடிவாரம் - கொடுங்குன்றநாதர் சந்நிதி
மலையின் அடிவாரப் பகுதியில் கிழக்குப் பார்த்து கொடுங்குன்றநாதர் மிகச் சிறிய லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கின்றார். கொடுங்குன்றநாதர் சந்நிதி வலம் வரும்போது அறுபத்துமூவர் மூலமூர்த்தங்களும், விநாயகர், அம்மையப்பர் சந்நிதிகளும் உள்ளன.
நவக்கிரக சந்நிதிகளில் எல்லா கிரகங்களும் அமர்ந்த நிலையில் உள்ளன. அம்பாள் குயிலமுதநாயகி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இக்கோவிலின் வடகிழக்குப் பிரகாரத்தின் கூரைப் பகுதியில் தொங்கும் கல்வளையங்கள் சிற்பக் கலைச் சிறப்பு மிக்கவை.
சிறப்பு: இங்கு இருக்கும் இறைவனுக்கு வாசனை அற்ற மலர்கள் (கேந்தி) அர்ச்சனை செய்ய உபயோகப்படுத்துவதில்லை.
தல வரலாறு
அகத்திய முனிவர் வழிபாடு
தென்திசையை நேராக்க வந்த அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றார். அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்ட ஸ்தலங்கள் -
- கொடுங்குன்றம்
- குற்றாலம்
- திருப்பனங்காடு
- திருக்கள்ளில்
- திருவொற்றியூர்
- திருவேற்காடு
- திருவான்மியூர்
- அச்சிறுபாக்கம்
- திருநல்லூர்
- திருநனிபள்ளி (புஞ்ஜை)
அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க, இறைவன் மங்கையொரு பாகனாகக் காட்சி அளித்த பல தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.
சித்தர்கள் வாழும் மலை
சித்தர்கள் பலர் இன்னமும் சூட்சும வடிவில் இந்த மலையில் வாழ்வதாக நம்பப்படுகிறது. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.
திருப்புகழ் தலம்
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன.
முருகன் சந்நிதி சிறப்பு
- இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும், இரு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
- வழக்கமாக முருகன் சந்நிதி எதிரில் இருக்கும் மயில் வாகனத்திற்கு பதிலாக இங்கு யானை உள்ளது.
- முருகன் சந்நிதி எதிரில் 18 துவாரங்களுடன் கூடிய மதில் உள்ளது. இந்த மதில் வழியாகத்தான் யானையைப் பார்க்க முடியும்.
கோவில் சிறப்பம்சங்கள்
தல விருட்சம்
- உறங்காப்புளி மரம்: கோயிலுள் உள்ள தீர்த்தத்தின் கரையில் உள்ளது.
- பெயரில்லா மரம்: மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்குப் பக்கத்தில் மலைக்கற்களின் இடுக்கில் உள்ளது. இதுவரை இம்மரத்தை என்ன பெயர், எந்த வகையைச் சார்ந்தது என்பதை யாராலும் அறிந்து கொள்ளமுடியாததால் இதனை பெயரில்லா மரம் என்று அழைக்கின்றனர்.
தீர்த்தம்
தேனாழி தீர்த்தம்: மகோதர மகரிஷி, ஆதிசேஷன், பிரம்மா, சரஸ்வதி, சுப்ரமண்யர், நந்தி ஆகியோர் வந்து வழிபட்டு அருள் பெற்றிருக்கின்றனர்.
மலையடிவாரத்தில் கோயிலின் நுழைவாயில் முன்புறம் அடையவளைந்தான் என்ற பெயர் கொண்ட திருக்குளம் உள்ளது.
விழாக்கள்
- சித்திரை மாதம்: பெருவிழா
- தை மாதம்: பைரவருக்கு சிறப்பு விழா
மலை ஏறுதல்
ஏறுவதற்கு மிகவும் கடினமானது என்பதாலும், கொடிய பல வளைவுகளைக் கொண்டிருப்பதாலும் இது கொடுங்குன்றம் என்றழைக்கப்படுகின்றது.
- அடிவாரத்தில் இருந்து மலையுச்சிக்கு சுமார் ஒரு கி.மீ. நடக்க வேண்டும்.
- செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருந்தாலும் ஏறுவதற்கு எளிதாக இருக்கிறது.
- அடிவாரத்தில் கோயிலின் நுழைவாயில் முன்புறம் அடையவளைந்தான் என்ற பெயர் கொண்ட திருக்குளம் உள்ளது.
- அதனை அடுத்துள்ள ராஜா மண்டபத்தைக் கடந்து, விநாயகரை வழிபட்டுப்பின் உச்சிக் கோயில், இடைக்கோயில், அடுத்து அடிவாரக் கோயில் என வழிபட வேண்டும் என்பது மரபாக இருக்கிறது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் செய்த பாவங்கள் நீங்க, மூன்றடுக்குள்ள சிவாலயமான பிரான்மலை மங்கைபாகர் கோயிலை தரிசனம் செய்து பேறு பெறுவோம்.
பதிகம் திருப்புகழ்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
கொடுங்குன்றநாதர் ஆலயம் புகைப்படங்கள்