A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
வலம்புரிநாதர் திருக்கோவில், திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)

சிவஸ்தலம் பெயர்: திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)

இறைவன் பெயர்: வலம்புரநாதர்

இறைவி பெயர்: வடுவகிர்க்கண்ணியம்மை

பதிகம்: திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1

வலம்புரிநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்தும் பூம்புகார்ச் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து, அங்கிருந்து சென்றாலும் இத்தலத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி
செயலாளர்
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில்
மேலப்பெரும்பள்ளம்
மேலையூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609 107
ஆலய நேரம்

காலை: 8:30 - 11:00
மாலை: 5:30 - 8:00

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – வலம்புரிநாதர் திருக்கோவில், திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
தலச் சிறப்பு
மகாவிஷ்ணு வழிபாடு

மகாவிஷ்ணு சிவனைக் குறித்து தவம் செய்யப் போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக மகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

திருவலம்புரம் பெயர்க்காரணம்

காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) திருவலஞ்சுழி தலத்தில் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழியில் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னை பலி கொடுத்து காவிரியை மீண்டும் வெளிக் கொண்டுவந்த பிறகு வலமாக வந்து இத்தலத்தில் கரையேறினார். அதனால் இத்தலம் "திருவலம்புரம்" ஆனது. ஹேரண்ட மகரிஷிக்கு இத்தலத்தில் தனி கோயில் உள்ளது.

திருநாவுக்கரசருக்கு காட்சி

சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார்.

மேலப்பெரும்பள்ளம் பெயர்க்காரணம்

இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் "மேலப்பெரும்பள்ளம்" என்று அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

கோவில் அமைப்பு
மூவராலும் பாடப்பெற்ற தலம்

மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்ற இத்தலம் ஒரு மாடக் கோவிலாகும். கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் விற்றிருக்கின்றார். அருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட லிங்கமும் உள்ளன.

மூலவர் சந்நிதி

கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தில் மூலவர் வலம்புரிநாதர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கருவறை சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

பிற சந்நிதிகள்

உள் பிராகாரத்தில் சூரியன், விநாயகர், நால்வர், விசுவநாதர், முருகர், இராமநாதர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் மூர்த்தம் மிகச் சிறப்பாக உள்ளது. நடராசர் சபையும் மகாமண்டபத்தில் உள்ளது.

தீர்த்தங்கள்

ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை உள்ளன.

தல விருட்சம்

தல விருட்சமாக ஆண்பனை விளங்குகிறது.

பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள்:

  1. புறவார் பனங்காட்டூர்
  2. திருவோத்தூர்
  3. திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)
  4. திருப்பனந்தாள்
  5. திருவலம்புரம்
  6. திருப்பனையூர்
தல வரலாறு
மகத மன்னன் தனஞ்செயன் கதை

மகத நாட்டு மன்னன் தனஞ்செயன் என்பவன் தனது மகனிடம், "நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு எனது அஸ்தியை கரைத்து விடு" என்று கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக மாறியதைக் கண்டு அஸதியை இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் கரைத்தான். அந்த மன்னனின் சிலை இத்தலத்தில் உள்ளது. எனவே இத்தலம் காசியை விட புனிதமானது என்று புராணங்கள் கூறுகிறது.

பட்டினத்தார் வடிகஞ்சி அருந்திய வரலாறு

மற்றொரு தல வரலாறும் இத்தலத்திற்கு சொல்லப்படுகிறது. அரசன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாக அமைச்சர் மூலம் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது. பழி நீங்க சான்றோர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்களும் நாடொறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் அதில் எவரேனும் மகான் ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில் உள்ள மணி ஒலிக்கும், அப்போது பழிதீரும் என்று மன்னனுக்குச் சொல்லினர். அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்து வந்தான்.

ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி, "அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்" என கூறியது. அன்னதானம் தொடர்ந்து நடந்து வர, பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.

அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. பட்டினத்தாரை மன்னன் சென்று வரவேற்கும் ஐதீக திருவிழா இத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

பதிகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துப் பதிகம்
  1. தென் திரை தேங்கி ஓதம் சென்று
  2. மண்ணளந்த மணிவண்ணர்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துப் பதிகம்
  1. கொடியுடை மும்மதி
சுந்தரர் அருளிய இத்தலத்துப் பதிகம்
  1. எனக்கினித் தினைத்தனை
மேலும் புகைப்படங்கள்