அகத்தீச்சரம் - அகத்தீஸ்வரர் திருக்கோவில், வைப்புத் தலம்
சிவஸ்தலம் பெயர்: அகத்தீச்சரம் (அகத்தீஸ்வரம்)
இறைவன் பெயர்: அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்: அறம்வளர்த்த நாயகி, அமுதவல்லி
பதிகம்: அப்பர் (6-71-8)
முக்கிய குறிப்பு
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள திண்டீச்சரம், நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
எப்படிப் போவது
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் NH47 தேசீய நெடுஞ்சாலையில் பயணித்து கொட்டாரம் என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து அகத்தீஸ்வரம் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றால் வழியில் வடுகன்பற்று என்ற இடம் வரும். இங்கிருந்து அருகாமையிலுள்ள அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவிலை அடையலாம். கன்னியாகுமரியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஆலய முகவரி
வடுகன்பற்று
அகத்தீஸ்வரம் அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்
PIN - 622101
ஆலய நேரம்
காலை: 6:00 AM - 11:00 AM
மாலை: 6:00 PM - 7:00 PM
ஆலய வரலாறு
அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். அகத்தியர் வழிபட்டதால் இத்தலம் அகத்தீச்சரம் என்று பெயர் பெற்றது. அகத்தியருக்கும், லோபமுத்திரைக்கும் இத்தல இறைவன் தலவிருட்சமான அத்தி மரத்தின் கீழ் திருமணக் கோலம் காட்டி அருளியுள்ளார். அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதி தனியாகவுள்ளது.
கல்வெட்டுக் குறிப்பு
இந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டில் "குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீஸ்வரமுடைய மாதேவன்" என வரும் தொடரால் குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீஸ்வரம் என்பது ஆலயத்தின் பெயராகவும் கொள்ளலாகும். குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் இந்தக் கல்வெட்டு சாசனத்தில் குறிக்கப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே இன்றைய நாளில் ஊர்ப் பெயராயிற்று என்பதும் தெளிவாகிறது.
பதிகம்
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது "சுரம்" என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.
நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மா காளேச்
சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.
பொழிப்புரை
கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக...