அசோகந்தி - அயவந்தீஸ்வரர் திருக்கோவில், வைப்புத் தலம்
சிவஸ்தலம் பெயர்: அசோகந்தி, அயோகந்தி (தற்போது சீயாத்தமங்கை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்: அயவந்தீஸ்வரர்
இறைவி பெயர்: உபய புஷ்ப விலோசனி, மலர்க்கண்ணம்மை
பதிகம்: அப்பர் (6-7-10, 6-70-9)
முக்கிய குறிப்பு
திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்று பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலமாக விளங்கும் திருசாத்தமங்கை தற்போது சீயாத்தமங்கை என்ற பெயருடன் வழங்குகிறது. இத்தலம் அப்பர் பெருமானால் திருவதிகை வீரட்டானத்திற்குரிய பதிகத்திலும் (6-7-10), ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்திலும் (6-70-9) வைப்புத் தலமாக அயோகந்தி, அசோகந்தி என்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படிப் போவது
நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன் "கோயில் சீயாத்தமங்கை" என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
நாகப்பட்டினம் - கும்பகோணம் சாலையில், நாகப்பட்டினத்துக்கும் சன்னாநல்லூருக்கும் நடுவே அமைந்துள்ளது சீயாத்தமங்கை. பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு பயணித்தும் ஸ்ரீஅயவந்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் 13 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
பெயர் குறிப்பு
ஊருக்கு "சாத்தமங்கை" என்றும், கோயிலுக்கு "அயவந்தி" என்றும் பெயர். திருச்சாத்தமங்கையில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர், இராமனதீச்சரம் ஆகிய மற்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம்.
ஆலய முகவரி
சீயாத்தமங்கை
சீயாத்தமங்கை அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609702
ஆலய நேரம்
காலை: 8:00 AM - 12:00 PM
மாலை: 5:30 PM - 7:30 PM
தொடர்புடைய பாடல் பெற்ற தலம்
இத்திருக்கோவில் பற்றிய மற்ற விபரங்களுக்கு காவிரி தென்கரை பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான திருசாத்தமங்கை பற்றிய தகவல்களைப் பார்க்கவும்.
குறிப்பு
இந்த வைப்புத் தலம் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருசாத்தமங்கை (SCN081) என்ற சிவஸ்தலத்தோடு தொடர்புடையது. மேலும் விரிவான தகவல்களுக்கு அந்த பாடல் பெற்ற தலப் பக்கத்தைப் பார்க்கவும்.
பதிகம் - முதல் குறிப்பு (6-7-10)
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
சிந்தும் புனற்கெடில வீரட்டமும் 6-7-10
திருவாஞ்சியமும் திருநள்ளாறும்
அந்தண் பொழில் புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற்கு இடமாவதாம்
இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.
பொழிப்புரை
அதிகை வீரட்டம், வாஞ்சியம், நள்ளாறு, தண்பொழில் சூழ் அயோகந்தி, ஆக்கூர், ஆவூர், ஆன்பட்டி, இடைச்சுரம், தலைச்சங்காடு, நறுமணம் கமழும் கரவீரம், சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம்.
பதிகம் - இரண்டாம் குறிப்பு (6-70-9)
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி 6-70-9
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டம் கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே.
பொழிப்புரை
திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.