தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
அணி அண்ணாமலை - ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோவில், வைப்புத் தலம்

சிவஸ்தலம் பெயர்: அணி அண்ணாமலை

இறைவன் பெயர்: ஆதி அருணாசலேஸ்வரர்

இறைவி பெயர்: ஆதி அபீதகுஜாம்பாள்

பதிகம்: அப்பர் (4-63-1, 4-63-4)

கோவில் அறிமுகம்

திருவண்ணாமலை கிரிவலம் வரும்போது வருண லிங்கம் கோவிலை அடுத்து அணி அண்ணாமலை திருக்கோயில் உள்ளது; மக்கள் அடி அண்ணாமலை திருக்கோயில் என்று அழைக்கின்றனர்.

கோவில் நிர்வாகம்

இக்கோயில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் உள்ளது.

எப்படிப் போவது

தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலிருந்தும் திருவண்ணாமலை செல்லப் பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

பேருந்து வசதி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்தும் திருவண்ணாமலைக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
அடி அண்ணாமலை
திருவண்ணாமலை அஞ்சல்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 606601
ஆலய நேரம்

காலை: 8:00 AM - 12:00 PM
மாலை: 4:00 PM - 8:30 PM

பதிகம் குறிப்பு

திருநாவுக்கரசரின் 4-ம் திருமுறையில் 63வது பதிகத்தில் 1-வது பாடலிலும், 4-ம் திருமுறையில் 63-வது பதிகத்தில் 4-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

பாடல் 1 (4-63-1)
ஓதி மா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர் மழுப்படையினானே
ஆதியே அமரர் கோவே அணி அணாமலையுளானே
நீதியால் நின்னை அல்லால் இனி நினையுமா நினைவு இலேனே
பொழிப்புரை

பார்வதிபாகனே, மேம்பட்ட சோதியே, கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே, மழுப் படையை ஏந்தியவனே, ஆதியே, தேவர்கட்குத்தலைவனே, அழகிய அண்ணாமலையில் இருப்பவனே, உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன்.

பாடல் 4 (4-63-4)
பைம்பொனே பவளக்குன்றே பரமனே பால்வெண்ணீறா
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணி அணாமலையுளானே
என்பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே.
பொழிப்புரை

பசிய பொன்னே ! பவளமலையே, மேம்பட்டவனே! பால் போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே, செம்பொன்னே, மலர் போன்ற திருவடிகளை உடையவனே, சிறப்பு மிக்க மாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே, உன்னைத் தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன்.

வரைபடம் - ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோவில், அணி அண்ணாமலை