அன்னல்வாயில் - விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், வைப்புத் தலம்
சிவஸ்தலம் பெயர்: அன்னல்வாயில் (இன்றைய நாளில் அன்னவாசல் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்: விருத்தபுரீஸ்வரர்
இறைவி பெயர்: தர்மசம்வர்தினி
பதிகம்: அப்பர் (6-71-7)
விருத்தபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
புதுக்கோட்டை - விராலிமலை - மணப்பாறை சாலை வழியில் விராலிமலைக்கு முன்பாகவே அன்னவாசல் என்ற ஊர் வரும். அங்கிருந்து கீரனூர் செல்லும் சாலையில் சிறிது தூரம் பயணித்தால் கோவிலை அடையலாம். கீரனூர் சாலையில் விசாரித்துச் செல்ல வேண்டும்.
தூரம்
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அன்னவாசல்
அன்னவாசல் அஞ்சல்
வழி இலுப்பூர்
இலுப்பூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
PIN - 622101
ஆலய நேரம்
காலை: 6:00 AM - 12:00 PM
மாலை: 4:00 PM - 8:00 PM
வைப்புத் தல குறிப்பு
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நெடுவாயில், நெய்தல்வாயில், ஞாழல்வாயில், குணவாயில் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
குறிப்பு
சிவஸ்தலம் பெயர் அன்னல்வாயில் என்பதாகும். இன்றைய நாளில் அன்னவாசல் என்று அழைக்கப்படுகிறது.
சித்தன்னவாசல் - குடைவரை ஓவியங்கள்
அண்ணல்வாயில் தலத்திற்கு அருகிலுள்ள சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்ற ஊர் ஆகும்.
வரலாற்று முக்கியத்துவம்
சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு சமணர்களால் வரையப்பட்டவை.
இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.
பாதுகாப்பு
புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது.
மாத்ருபூதேசுவரர் ஆலயம்
சித்தன்னவாசல் ஊரின் மலை அடிவாரத்தில் பழமையான சிவாலயம் ஒன்றுள்ளது. இதிலுள்ள சுவாமியின் பெயர் மாத்ருபூதேசுவரர். அம்பாள் பெயர் சுகந்த குந்தளாம்பிகை.
பதிகம் குறிப்பு
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
பாடல் (6-71-7)
கடு வாயர்தமை நீக்கி என்னை ஆட்கொள்
கண் நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில்
நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில்
மடு ஆர் தென்மதுரைநகர் ஆலவாயில்
மறிகடல் சூழ் புனவாயில் மாடம் நீடு
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே.
பொழிப்புரை
கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை ஆட்கொண்ட கண்ணுதற் கடவுளாகிய சிவ பெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடுவாயில், பயிர் நிறைந்த, வயல் சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வைகை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில், குண வாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைக் கொடுவினைகள் ஏதும் ஒரு நாளும் பற்றாது.
பாடல் விளக்கம்
இப்பாடலில் "வாயில்" என்று முடியும் தலங்களை வகுத்து அப்பர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாக்கின் சுவையறியும் உணர்வு ஆற்றலைக் கெடுக்கும் பொருட்டு சமணர்கள் கடுக்காயை அவ்வப்பொழுது வாயிலிட்டுத் தின்பதை பழக்கமாகக் கொண்டிருந்ததைக் குறிப்பிடும் வகையில் இப்பதிகப் பாடலை கடு வாயர்தமை என்று ஆரம்பித்து அப்பர் பாடியுள்ளார். சமண சமயத்தைச் சார்ந்திருந்த அவரை சூலை நோயைக் கொடுத்து ஆட்கொண்டு சைவத்திற்கு மாற்றியதைக் குறிப்பிடுகிறார்.
விருத்தபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்