எழுமூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் - வைப்புத் தலம்
சிவஸ்தலம்
எழுமூர் (சென்னை)
இறைவன்
அர்த்தநாரீஸ்வரர்
இறைவி
திரிபுரசுந்தரி
பதிகம்
அப்பர் (6-70-5)
எழுமூர் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பழைய தாசப்பிரகாஷ் ஹோட்டலுக்கு மேற்குப்புறம் மதிற்சுவரை ஒட்டியுள்ள சிறிய தெருவில் சென்றால் வலதுபுறம் சிவகாசி நாடார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதை ஒட்டியுள்ள சிறிய தெருவில் (ஆராவமுதன் தோட்டம் முதல் தெரு) திரும்பினால் கோவில் உள்ளது.
ஆலய முகவரி
ஆராவமுதன் தோட்டத் தெரு
எழும்பூர்
சென்னை
சென்னை மாவட்டம்
PIN - 600008
ஆலய நேரம்
காலை : 7:30 - 11:00
மாலை : 5:30 - 8:00
ஆலயச் சிறப்பும் வரலாறும்
தல வரலாறு
தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் வைப்புத் தலமாக குறிப்பிடப்பட்டு சிறப்பு பெற்ற இத்தலம் காலப்போக்கில் சிதிலமடைந்து ஆங்கிலேயர்கள் காலத்தில் முற்றிலும் அழிந்து விட்டது. சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வசித்த பெரியவர் ஒருவரின் தோட்டத்துக் குளத்தில் நீர் வற்றியபோது தூர் எடுக்கச் செய்தார். அச்சமயம் இக்கோயில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. உடனே சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு, அருகில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து அதில் வைக்கப்பட்டு தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்து வந்துள்ளனர். சில காலத்திற்குப் பின்னர் கோயில் அமைத்துள்ளனர். முற்காலத்தில் ஒரு பெரிய கோவிலாக இருத்திருக்கக் கூடிய இவ்வாலயம் இன்று சுருங்கி ஒரு மிகச்சிறிய ஆலயமாக உள்ளது. சென்னை நகர வளர்ச்சியில் கோவிலைச் சுற்றி மூன்று புறமும் வீடுகள். அவைகளுக்கு நடுவில் ஒரு சிறிய ஆலயமாக சுமார் 1000 சதுர அடிக்குள் இன்று காணப்படுகிறது.
கோவில் அமைப்பு
இந்து சமய அறநிலை கட்டுபாட்டின் கீழ் வரும் இக்கோவிலில் திருப்பணி வேலைகள் தற்சமயம் நடைபெற்று 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. புதிய கட்டுமானப்படி கோவிலுக்கு கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளனர். முகப்பு வாயிலின் மேற்புறம் அர்த்தநாரீஸ்வரர், அவர் அருகில் நந்தி, நால்வர் ஆகியோர் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். அதையடுத்து கிழக்கு நோக்கிய மூலவர் கருவறை உள்ளது. மூலவர் அர்த்தநாரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக வழிபடப்படுகிறார். இந்த லிங்கம் மிகப் பெரியது. மூன்றரை அடி விட்டமுள்ள ஆவுடையாரும், அதற்கு மேல் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கமும் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. லிங்கத் திருமேனியின் பின்புறம் கருவறைச் சுவற்றில் புடைப்புப் சிற்பமாக அர்த்தநாரீஸ்வரர் உருவம் உள்ளது. கருவறை வாயிலின் இருபுபறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். சிறிய கருவறையைச் சுற்றி உள்ள தெற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய லட்சுமி நாராயணப் பெருமாள் சந்நிதியும், அவருக்கு எதிரே கருடனுக்கு சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் திரிபுரசுந்தரியின் சந்நிதியும், அருகில் நவக்கிரக சந்நிதியும் இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியின் பின்புறம் பைரவர் சந்நிதி உள்ளது.
தல சிறப்பு
அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயருடன் மூலவராக எழுந்தருளியுள்ள இவரை வழிபட்டால் சிவனையும், சக்தியையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் மேலும் சிவனும் பெருமாளும் அருகருகே அமைந்து அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு.
பதிக குறிப்பு
பதிகப் பாடல் (6-70-5)
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 5-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர்
கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும்
நின்றியூர் நீடூர் நியமநல்லூர் இடும்பாவனம்
எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர்
ஏர் ஆரும் ஏமகூடம் கடம்பை இளங்கோயில்
தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணலாமே.
பொழிப்புரை
கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங் கோயில் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.
கூடுதல் குறிப்புகள்
இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்ட பிற வைப்புத் தலங்கள்
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், நியமநல்லூர், ஏழூர், தோழூர், ஏமகூடம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
எழுமூர் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்