தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

ஏமநல்லூர் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - வைப்புத் தலம்

சிவஸ்தலம்

ஏமநல்லூர் (இன்றைய நாளில் திருலோக்கி என்று பெயர்)

இறைவன்

சுந்தரேஸ்வரர்

இறைவி

அகிலாண்டேஸ்வரி

பதிகம்

அப்பர் (6-70-4)

ஏமநல்லூர் (திருலோக்கி) சுந்தரேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மி. தொலைவில் திருலோக்கி உள்ளது. ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோவில், மாந்துறை, கீழச்சூரியமூலை ஆகிய ஊர்கள் வழியாகவும் திருலோக்கியை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து கஞ்சனூர் வழியாக திருலோக்கி செல்லப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
திருலோக்கி
திருலோக்கி அஞ்சல்
வழி துகிலி
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 609804

ஆலய நேரம்

காலை :  8:00 - 12:00

மாலை :  5:00 - 8:00

ஆலய குருக்கள் வீடு அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசிக்கலாம்.
வரைபடம் – ஏமநல்லூர் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - வைப்புத் தலம்
ஆலயச் சிறப்பும் வரலாறும்
கோவில் அமைப்பு

காவிரியின் கிளை நதியான பழவாற்றின் வடகரையில் திருலோக்கி என்ற இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் கருவறையில் இறைவனும் இறைவியும் கிழக்கு திசை நோக்கி அருள் பாலிக்கின்றனர், இறைவன் சந்நிதிக்கு முன்புள்ள மகாமண்டபத்தில் ஒரே கல்லால் ஆன ரிஷபாரூடர் சிலா உருவில் வடக்கு திசை நோக்கி தரிசனம் தருகிறார். பின்புறத்தில் லிங்க வடிவமும் செதுக்கப்பட்டு உள்ளது. வியப்பூட்டும் இப் புதுமையான சிலாவடிவம் வேறெங்கும் காண முடியாதது என்பது இத்தலத்தின் சிறப்பு. எதிரே ரிஷபாரூடரை வணங்கும் கோலத்தில் குரு பகவான் காட்சி தருகிறார். மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த பிறகு, ரதிதேவி தன் கணவனை உயிர் மீட்டுத் தரும்படி இறைவனை வேண்டினாள். குரு பகவானும் ரதிக்கு அருள் பாலிக்கும் படி இத்தலத்தில் ஈசனை வேண்டினார். ரிஷபாருடர், பார்வதி தேவியாருடன் ஆலிங்கன மூர்த்தியாக குரு பகவானுக்கு காட்சியளித்து இந்தத் தலத்தில் தான் மன்மதனை உயிர்ப்பித்து ரதிக்கும் அருள் பாலித்தார் என்பது தல வரலாறு கூறும் செய்தியாகும். ரிஷபாரூடருக்கு நேர் எதிரே ரதி, மண்மதன் ஆலிங்கன சிற்பம் உள்ளதைக் காணலாம். ரிஷபாரூடர் சிற்பமும், ரதி மன்மதன் ஆலிங்கனச் சிற்பமும் சோழர் கால சிற்பத் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர், பைரவர், பிச்சாடனர் வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி என்று நிறைய சிலா திருமேனிகள் உள்ளதைக் காணலாம். சண்டிகேசுவரர் திருமேனியும் தனித்து உள்ளது. தேவகோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

தல வரலாறு

தஞ்சைப் பெரிய கோவில் சாசனம் ஒன்றில், "மண்ணி நாட்டு ஏம நல்லூராகிய திரைலோக்கிய மகாதேவி சதுர் வேதி மங்கலம்" என்ற வாசகம் உள்ளது. முதலாம் இராஜராஜனின் பட்டத்து அரசிகளில் ஒருவர் திரைலோக்கிய மாதேவியார். ஏமநல்லூர் அவரின் பெயரால் திரைலோக்கிய மாதேவியார் சதுர்வேதி மங்கலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டு நாளடைவில் திருலோக்கி என மருவி அழைக்கப்படுகிறது. மூன்று லோகங்களிலும் உள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் சித்புருஷர்களும், மஹரிஷிகளும், வாசம் செய்யும் புனித தலமான இத்தலத்தில் அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஆலயம், அருள்மிகு கைலாசநாதர் ஆலயம் ஆகியவையும் உள்ளன. திருமகள் திருமால் மனதில் இடம் பெற வேண்டி தவம் இயற்ற தகுந்த இடம் எது என்று மார்க்கண்டேய மகரிஷியிடம் கேட்டாள். அவர் அறிவுரைப்படி ஏமநல்லூர் என்று தேவாரத்தில் குறிப்பிடப்படும் திருலோக்கியான இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி, விலவ மரத்தினடியில் அமர்ந்து இத்தலத்திலுள்ள க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் மற்றும் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரரையும் தவம் புரிந்தாள். திருமகள் தவத்திற்கு மகிழ்ந்து மகாவிஷ்ணு தனது நெஞ்சில் திருமகளுக்கு இடம் கொடுத்தார்.

தல சிறப்பும் பரிகாரமும்

ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்த இத்தல இறைவன் சுந்தரேஸ்வரரை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் இணைந்து வாழ்வார்கள் என்பதும், தடைபட்ட திருமணம் நடப்பதுடன் மக்கள் பேறு கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இத்தல இறைவனை குரு பகவான் வணங்கி வழிபட்டதால், குருவினால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் விலகி நல்வாழ்வு தரும் பரிகாரத் தலமாகவும் இத்தலம் இது விளங்குகிறது. குரு பகவானின் அருளைப் பெற ஆலங்குடி, திட்டை, திருவலிதாயம் ஆகிய தலங்களுக்குச் சென்று நாம் அவரை வழிபடுகிறோம். ஆனால் அந்த குருபகவானே சில தலங்களில் இறைவன் சிவபெருமானை வழிபட்டிருக்கிறார். அப்படி அவர் சென்று வழிபட்ட கோயில்களுக்குச் சென்று அங்கு அருள்பாலிக்கும் இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது. இப்படி குரு பகவான் வழிபட்ட தலம் என்ற சிறப்பும் திருலோகி தலத்திற்குண்டு.

பதிக குறிப்பு
பதிகப் பாடல் (6-70-4)

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


எச்சிலிளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி
அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர்
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை
கைச்சினம் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
கயிலாய நாதனையே காணலாமே.
பொழிப்புரை

எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதுறை, அழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக் கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப்பலதளி, ஏகம்பம் இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.

கூடுதல் குறிப்புகள்
இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்ட பிற வைப்புத் தலங்கள்

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள எச்சில் இளமர், இறையான்சேரி, அளப்பூர், ஆறை, கச்சிப்பலதளி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

ஏமநல்லூர் (திருலோக்கி) சுந்தரேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்