அத்தி - அகத்தீஸ்வரர் திருக்கோவில், வைப்புத் தலம்
சிவஸ்தலம் பெயர்: அத்தி
இறைவன் பெயர்: அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்:
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது அத்தி கிராமம். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வந்தவாசியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பெருநகர் எனும் ஊர் (காஞ்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவு). பெருநகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம். பெருநகரில் இருந்து செல்ல ஆட்டோ வசதி உண்டு.
சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்தில் ஏறினால், மானாம்பதி கூட் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பெருநகர் வந்து, அத்தி கிராமத்தை அடையலாம். மானாம்பதி கூட் ரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம்.
ஆலய முகவரி
அத்தி
வழி பெருநகர்
வந்தவாசி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
ஆலய நேரம்
காலை: 7:00 AM - 11:00 AM
மாலை: 5:00 PM - 7:00 PM
கோவில் அறிமுகம்
தொண்டை நாட்டு வெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்த அத்தியென்னும் தலம், பழம் பெருமை வாய்ந்ததென்பது சாசனத்தால் விளங்கும். அங்கமைந்த பழைய ஆலயம் அகத்தீச்சுரமாகும். பண்டைத் தமிழரசர் பலர் அதனை ஆதரித்துள்ளார்கள். இராஜராஜ சோழன் காலத்தில் கேரளாந்தக நல்லூர் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது.
கேரளாந்தகன் என்பது அம் மன்னனுக்குரிய விருதுப் பெயராதலால் அவன் ஆதரவு பெற்ற தலங்களில் அத்தியும் ஒன்றென்று தோன்றுகின்றது. அப்பெயர் அத்தியின் மறு பெயராய் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிய தன்மை சாசனங்களால் விளங்கும். பின்பு விஜய நகரப் பெருவேந்தனாகிய கிருஷ்ண தேவராயன் காலத்தில் கிருஷ்ண ராயபுரம் என்னும் பெயர் அத்திக்கு அமைந்தது.
இங்ஙனம் பல படியாகப் பெரு மன்னர் ஆதரவுக்குரியதாக விளங்கிய அத்தியே திருஞானசம்பந்தர் குறித்த வைப்புத் தல ஊராக இருத்தல் கூடும்.
மூலம்: ரா. சேதுப்பிள்ளை அவர்களின் புத்தகம்
தல வரலாறு
பல கிராமங்கள் சேர்ந்த பகுதியை நாடு என அழைக்கும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள நாடுகளில், பெருநகர நாடு ஓரளவு செழிப்பாக இருந்தபோதிலும், பல பகுதிகள் வறண்ட நிலையில் இருந்தன.
மூன்றாம் ராஜராஜன் வருகை
பெருநகர தேசத்தை வளமாக்கவேண்டும் எனும் நோக்கத்தில், அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார் மூன்றாம் ராஜராஜன். அந்தத் தேசத்தின் ஒரு பகுதி, அத்திமரம் நிறைந்த வனமாகத் திகழ்ந்தது. "இந்த வனத்தை விவசாயம் செய்யும் பூமியாக மாற்றினால் என்ன?" எனும் யோசனையுடன் குதிரையில் வந்துகொண்டிருந்தார் மன்னர்.
சிவலிங்கம் கண்டெடுப்பு
அப்போது, ஏதோ ஒன்று இடற, குதிரை குப்புற விழுந்தது. அதோடு சேர்ந்து விழுந்த மன்னர் சுதாரித்து எழுந்தார். பதறிப்போன படைவீரர்களும் அமைச்சர்களும் ஓடி வந்தனர். குதிரை இடறி விழுந்த இடத்தை நோட்டமிட்ட மன்னர், அந்த இடத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டார். அதன்படி வீரர்கள் அந்த இடத்தைத் தோண்ட, அனைவருமே சிலிர்த்துப் போனார்கள். அங்கே, அழகிய சிவலிங்கம் ஒன்று இருந்தது!
கோவில் அமைத்தல்
இந்த வனத்தை விவசாய பூமியாக மாற்றவேண்டும் என்று சிந்தித்தபடி வந்தேன். இதோ... தென்னாடுடைய சிவனே உத்தரவு தந்து, அவரது அருளையும் வழங்கிவிட்டார்' என உள்ளம் பூரித்தார் மன்னர். "சித்தர்களோ முனிவர்களோ, இந்தச் சிவலிங்கத்தை அனுதினமும் பூஜித்து வந்திருக்கவேண்டும். எனவே, இந்த லிங்கத்திருமேனியை ஸ்தாபித்து, அழகான கோயில் அமைக்க எண்ணியுள்ளேன்" எனச் சொன்னார் மூன்றாம் ராஜராஜன்.
அதன்படி, அழகிய தூண்களும் மண்டபமுமாக கலை நயத்துடன் அங்கே ஒரு கோயில் எழுப்பப்பட்டது. அத்தி வனத்தில் அமைந்த கோயில் என்பதால், ஸ்வாமிக்கு ஸ்ரீஅத்தீஸ்வரமுடையார் எனும் திருநாமத்தைச் சூட்டினார் மன்னர். பிறகு அந்த வனம் மெள்ள மெள்ளக் குடியிருப்புப் பகுதியாக மாறி, கிராமமாக உருவானது. அந்தக் கிராமத்துக்கு அத்தி யான கேளாந்தகநல்லூர் எனும் பெயர் அமைந்தது. அதன்பின், பெருநகர தேசமே செழிப்புற்று விளங்கியதாம்!
கல்வெட்டுக் குறிப்பு
கல்வெட்டுகளில் இத்தலம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டு அத்தி அகத்தீசுவரமுடையார் கோயில் கேரளாந்தகநல்லூர் என குறிபிடப்பட்டுள்ளது.
தல வரலாறு மூலம்: தமிழ் விக்கிபீடியா
பதிகம் குறிப்பு
திருஞானசம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் சம்பந்தர் சீர்காழியில் தங்கி இருந்த போது பாடியருளிய திருப்பதிகங்களில் ஒன்றாகும்.
பதிகப் பாடல் (2-39-2)
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு
அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம்
பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண் ஆர் மொழி மங்கை ஓர் பங்கு உடையான்
பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும்
இடும்பைக்கடல் நீந்தலாம் காரணமே.
பொழிப்புரை
அண்ணாமலை, ஈங்கோய்மலை, அத்தி, திருமுதுகுன்றம், கொடுங்குன்றம், காளத்தி, திருக்கழுக்குன்றம், வாட்போக்கி, திருப்பரங்குன்றம், பருப்பதம் முதலான தலங்களை விரும்பி இரவும் பகலும் நினைத்தால் அது துன்பக்கடலை நீந்துவதற்குக் காரணமாய் அமையும்.