அயனீச்சுரம் கைலாசநாதர் திருக்கோவில், வைப்புத் தலம்
சிவஸ்தலம் பெயர்: அயனீச்சுரம் (இந்நாளில் பிரம்மதேசம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்: கைலாசநாதர்
இறைவி பெயர்: பெரியநாயகி
பதிகம்: அப்பர் (6-71-8)
கைலாசநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
அம்பாசமுத்திரம் - முக்கூடல் பாதையில், அம்பாசமுத்திரத்திலிருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து சென்று வர நகரப் பேருந்து வசதி மற்றும் ஆட்டோ, வாடகைக் கார் வசதியுள்ளது.
ஆலய முகவரி
பிரம்மதேசம்
பிரம்மதேசம் அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநேல்வேலி மாவட்டம்
PIN - 627414
ஆலய நேரம்
காலை: 7:30 AM - 9:00 AM
மாலை: 5:30 PM - 7:00 PM
சிறப்புக் குறிப்பு
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அத்தீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தல வரலாறு
ராஜராஜசோழன் காலம்
பிரம்மதேசம் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருவாலீஸ்வரம் ஊரில் ராஜராஜசோழன் கட்டிய திருவாலிநாதசுவாமி கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு ராஜராஜசதுரவேதிமங்கலம் என்று அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த ஊரை அந்தணர்களுக்கு தானமாக தந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.
நாலாயிரத்தம்மன்
சோழர்கள் காலத்தில் மிகப் புகழ் பெற்று விளங்கிய பிரம்மதேசம் மிகவும் வளமான ஊர் என்பதால் அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்கள் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்கென ராஜராஜ சோழன் தன்னுடைய படை வீரர்கள் நாலாயிரம் பேரை இங்கு காவல் வைத்திருந்தான். அந்த வீரர்கள் வழிபட்ட துர்க்கைக்கு நாலாயிரத்தம்மன் என்றே பெயர். இன்றும்கூட நாலாயிரத்தம்மன் கோயில் கைலாசநாதர் கோயிலை ஒட்டியே காணப்படுகிறது.
போர்க்கால அரண்
சரித்திர காலங்களில் இத்தலத்திலுள்ள கோவில் ஒரு போர்க்கால அரணாக இருந்துள்ளது. சுற்றிலும் உள்ள நீண்ட மதிற்சுவர்கள் மேல்பாகம் சுமார் 2.5 அடி அகலமுள்ள ஆட்கள் நடமாடவும், வரும் பகைவர்களை கண்காணிக்கவும் உபயோகப்பட்டது. ஆலயத்தின் 7 நிலை இராஜகோபுத்திற்கு மேலே செல்ல படிகள் உண்டு.
கோவில் அமைப்பு
ராஜகோபுரம் மற்றும் தெப்பக்குளம்
தாமிரபரணி மஹாத்மியத்தில் அயனீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டு இன்றைய நாளில் பிரம்மதேசம் என்று வழங்கும் இத்தலத்திலுள்ள கைலாசநாதர் ஆலயம் கருணையாற்றின் தென்கரையில் ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுரத்திற்கு வெளியே பெரிய தெப்பக்குளம் காட்சி தருகிறது. இராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது, கட்டிடக்கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது.
கல் கூரை வேலைப்பாடு
கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்நவுடன் நாம் காண்பது மரத்தால் செய்யப்பட்டதைப் போன்ற நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட கல்லால் ஆன கூரையை உடைய முகப்பு மண்டபம். முதன் முதலாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு கணம் அது மரக்கூரையோ என்ற ஐயம் கண்டிப்பாக எழும். ஏனெனில் மரத்தில் செய்யப்படுவது போல அத்தனை நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு கல்லால் ஆன இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கல் சங்கிலி
அதையடுத்து வசந்த மண்டபமும், ஒரே கல்லால் ஆன சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நந்திகேஸ்வரர் திருவுருவம். நந்தியெம்பெருமான் உள்ள முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் ஒரே கல்லால் ஆன கல் சங்கிலி, அதன் நுனியில் ஒரு மணியும், அதனுடன் மணியின் நாக்கும் காணப்படுகிறது. இது அக்கால சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
கல் சங்கிலி
திருவாதிரை மண்டபம்
கோபுர வாயில் வழியே நுழைந்தவுடன் வலது புறத்தில் 20 யாளிகள் தாங்கி நிற்கும் தூண்கள் கொண்ட திருவாதிரை மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒரு தூணில் ராமர் அம்போடு மறைந்திருக்கும் காட்சியும், மற்றொரு தூணில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும் காட்சியும் அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன.
ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண் அருகே இருந்து பார்த்தால் வாலி-சுக்ரீவர் செதுக்கப்பட்ட தூணும், அவர்களது உருவமும் நன்கு புலப்படும். அதே நேரம் வாலி-சுக்ரீவர் உருவம் பொறித்த தூணிலிருந்து பார்த்தால் ராமர் இருக்கும் தூண் தெரியாது. இந்த அற்புதமான சிற்பக்கலைத் திறன் ஒவ்வொருவரும் பார்த்து மகிழ வேண்டிய காட்சியாகும்.
ஆலய சிறப்புகள்
புணுகு நடராஜர்
இத்தலத்திலுள்ள நடராஜர் புணுகு நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவர் அருகில் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், அம்மை சிவகாமி மற்றும் மாணிக்கவாசகர் சிலாவுருவங்களும் உள்ளன. இந்த நடராஜருக்கு வருடத்தில் மார்கழி மாத திருவாதிரை அன்று மட்டும்தான் அபிஷேகம். மற்ற நாட்களில் இவருக்கு வெறும் புனுகுக்காப்பு தான் சாத்தப்படுகிறது.
மூலவர் கைலாசநாதர்
உள்ளே கருவறையில் மூலவர் கைலாசநாதர் சுயம்புலிங்க உருவில் காட்சி அளிக்கிறார். கருவறைச் சுற்றில் வல்லப கணபதி, முருகர், சப்தமாதர்கள், தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், கோமதி சங்கரர், பாலசுப்பிரமணியர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகியோரைக் காணலாம்.
இலந்தையடிநாதர்
இத்தலத்தின் தலவிருடசம் இலந்தை மரம். இலந்தை மரத்தின் அடியில் பத்ரிவனேஸ்வரர் என்ற இலந்தையடிநாதருக்கு இங்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதிகள் தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு இலந்தையடிநாதரை தரிசித்து இங்கு வேண்டிக்கொண்டு, இலந்தை பழத்தை பக்தியுடன் உண்டு வழிபட்டால் அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் சரஸ்வதிக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது.
ஏழு விமானங்கள்
பெரிய 7 நிலை கோபுரம் கொண்டு சிறப்புறத் திகழும் இத்தலத்தில் ராஜகோபுரம், மத்தியகோபுரம், மேலகோபுரம் என மூன்று கோபுரங்களுடன் ஏழு விமானங்களும் அமைந்துள்ளன. கோயில் மேற்குப் பிரகாரத்தில் உள்ள தாமரை வடிவிலான வட்டவடிவ கல்லின் மீது நின்று நோக்கும் போது இவை அனைத்தும் ஒரே பார்வையில் தெரிவது சிறப்பாக உள்ளது.
பிட்சாடனர்
இறைவன் சந்நிதியில் இருந்து அம்பாள் சந்நிதிக்குப் போகும் வழியிலுள்ள சோமவார மண்டபமும், கூர்மபீடமும், அதன் மத்தியில் அமைந்துள்ள பிட்சாடனர் சபையில் பிரதானமாய் விளங்கும் சுமார் 7 அடி உயரமுள்ள பிட்சாடனர் சிலாவுருவம் எந்தவித பிடிமானமும் இல்லாமல் பூதகணங்கள் சூழ புவிஈர்ப்பு சக்தியின் துணை கொண்டு நின்ற நிலையில் காட்சி தருகிறார். சுற்றிலும் சுவற்றில் பிற தெய்வங்கள், தேவமாதர்கள், சந்திரன், சூரியன், விநாயகர் போன்றோர் காட்சி தருகின்றனர்.
சூரிய பூஜை
இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. ஆனால் சூரியனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. உத்தராயணம் மற்றும் தட்சிணாயனம் ஆகிய புண்ணிய தினங்களில் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் கைலாசநாதர் கருவறை வரை வந்து சுவாமி மீது பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது.
கல்வி பயன்
மேலும் கல்விக்கடவுளான சரஸ்வதிக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி அமைந்துள்ளது. சூரிய தலமாகவும் விளங்கி, சரஸ்வதியும் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வேண்டிக் கொண்டு படித்தால், கற்ற கல்வி நன்றாக நினைவில் நிற்கும் என்றும்; அதனால் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற முடியும் என்றும் கூறுகிறார்கள்.
பதிகம் குறிப்பு
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
பதிகப் பாடல் (6-71-8)
நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்
நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.
பொழிப்புரை
கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற்கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.
கைலாசநாதர் ஆலயம் புகைப்படங்கள்