Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கருவிலி கொட்டிட்டை (தற்போது கருவேலி என்றும், சற்குணேஸ்வரபுரம் என்றும் வழங்குகிறது)
இறைவன் பெயர்சற்குண நாதேஸ்வரர்
இறைவி பெயர்சர்வாங்க சுந்தரி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மி. வந்தும் கருவேலி தலத்தை அடையலாம். திருவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து கிழக்கில் 6 கி.மி. தொலைவிலும், வடக்கே சுமார் 4 கி.மி. தொலைவில் திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில்
கருவேலி (சற்குணேஸ்வரபுரம்)
கூந்தலூர் அஞ்சல்
எரவாஞ்சேரி S.O.
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 605501

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Moolavar Sargunalingeswarar

மூலவர் சற்குணலிங்கேஸ்வரர்

கோவில் அமைப்பு: ஒரு அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான நடைபாதை உள்ளது. நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.

ambal Sarvangasundari

அம்பாள் சர்வாங்கசுந்தரி

அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு. "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.

திருக்கருவிலி கொட்டிட்டை சற்குண நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலய முகப்பு வாயில்


முகப்பு வாயில் கடந்து விசாலமான நடைபாதை


3 நிலை இராஜ கோபுரம்


நடராஜர்


தன் இரு தேவியருடன் முருகர்


வெளிப் பிரகாரம்


சுவாமி சந்நிதி விமானம்


எம தீர்த்தம்


இராஜ கோபுரம் முன் நந்தி


திருநாவுக்கரசு சுவாமிகள் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலமான இத்தலத்தை அப்பர் தன் பதிகங்களிலே "கருவிலிக் கொட்டிட்டை" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே "கொட்டிட்டை" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் "கொட்டிட்டை" என்பதாகும். அவர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் "நீர் உம்மை நோக்கி கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக" என்று குறிப்பிடுகிறார்.

1. மட்டிட்ட குழலார் சுழலில் வலைப் 
பட்டிட்டு மயங்கிப் பரியாது நீர் 
கட்டிட்ட வினை போகக் கருவிலிக் 
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே.  

2. ஞாலம் அல்கு மனிதர்காள் நாடொறும் 
ஏல மா மலரோடு இலை கொண்டுநீர்
காலனார் வருதல்முன் கருவிலிக்
கோலவார் பொழில் கொட்டிட்டை சேர்மினே

3. பங்கம் ஆயின பேசப் பறைந்து நீர் 
மங்குமா நினையாதே மலர்கொடு 
கங்கை சேர் சடையான் தன் கருவிலிக் 
கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்மினே.  

4. வாடி நீர் வருந்தாதே மனிதர்காள் 
வேடனாய் விசயற்கு அருள் செய்தவெண் 
காடனார் உறைகின்ற கருவிலிக் 
கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்மினே. 

5. உய்யுமாறு இது கேண்மின் உலகத்தீர் 
பைகொள் பாம்பு அரையான் படை ஆர் மழுக் 
கையினான் உறைகின்ற கருவிலிக் 
கொய்கொள் பூம்பொழில் கொட்டிட்டை சேர்மினே. 

6. ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர் 
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி 
காற்றும் ஆகி நின்றான்றன் கருவிலிக் 
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.  

7. நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் 
பொல்லா வாறு செயப் புரியாது நீர் 
கல்லாரும் மதில் சூழ் தண் கருவிலிக் 
கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்மினே.  
 
8. பிணித்த நோய்ப்பிறவிப் பிறிவு எய்துமாறு 
உணர்த்தலாம் இது கேண்மின் உருத்திர 
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக் 
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே.  
 
9. நம்புவீரர் இது கேண்மின்கள் நாடொறும் 
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் 
ஏகம்பனார் உறைகின்ற கருவிலிக் 
கொம்பனார் பயில் கொட்டிட்டை சேர்மினே.  

10. பார் உளீர் இது கேண்மின் பருவரை 
பேருமாறு எடுத்தானை அடர்த்தவன் 
கார்கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலிக் 
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.  
Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved