A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
பாடலீஸ்வரர் திருக்கோவில், திருப்பாதிரிபுலியூர்

சிவஸ்தலம் பெயர்: திருப்பாதிரிபுலியூர் (தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதி)

இறைவன் பெயர்: பாடலீஸ்வரர், பாடலேஸ்வரர், தோன்றாத்துணை நாதர்

இறைவி பெயர்: பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவநாயகி

பதிகம்: திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1

பாடலீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

அருகில் உள்ள தலங்கள்

திருப்பாதிரிபுலியூருக்கு அருகே சுமார் 5 கி.மீ. தொலைவில் திருவந்திபுரம் என்கிற திவ்ய தேசம் உள்ளது. பெருமாள் இங்கு தேவநாத பெருமாளாக காட்சி அளிக்கிறார்.

1 திருவதிகை - 25 கிமி
3 திருமாணிகுழி - 9 கிமி
ஆலய முகவரி
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவில்
திருப்பாதிரிபுலியூர் அஞ்சல்
கடலூர்
கடலூர் மாவட்டம்
PIN - 607002
ஆலய நேரம்

காலை: 6:00 - 12:00
மாலை: 4:00 - 9:00

வரைபடம் – பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிபுலியூர்
கோவில் அமைப்பு
ராஜகோபுரமும் தீர்த்தமும்

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரதீர்த்தம் நல்ல படித்துறைகளுடன் உள்ளது.

சிவகர தீர்த்தம்

சிவகர தீர்த்தம்

வெளிப்பிரகாரம்

வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி முதலியவைகளைத் தரிசிக்கலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை.

உட்பிரகார சந்நிதிகள்

வெளிப்பிராகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தொழுது 2வது வாயிலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும், அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும்.

மற்ற சந்நிதிகள்

உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவிசெய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன.

மூலவர் சந்நிதி

துவாரபாலகரைத் தொழுது உட்சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது.

முருகப்பெருமான்

இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் வடக்கு நோக்கிய மயிலின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி தெய்வானை இருவரும் அருகே நின்ற கோலத்தில் காட்சிதருகின்றனர். அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.

பள்ளியறை சிறப்பு

எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்). ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

தல வரலாறு
பார்வதி தவம்

ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.

அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள்.

அருந்தவநாயகி சந்நிதி

ஆலயத்தில் இறைவன் கருவறை சுற்றி வரும்போது கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது.

கோவிலின் சிறப்பு
திருநாவுக்கரசர் வரலாறு

திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள்.

கரையேறவிட்ட குப்பம்

இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது. நாவுக்கரசர் பாடிய இப்பதிகம் நமசிவாய திருப்பதிகம் என்று போற்றப்படுகிறது.

தோன்றாத்துணை நாதர்

கரையேறிய அப்பர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் எனத் தொடங்கும் பதிகம் பாடி திருப்பாதிரிப்புலியூர் இறைவனைத் தொழுதார். அப் பதிகத்தில் "தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியோர்களுக்கே" என்று குறிப்பிடுவதால் இத்தல இறைவன் தோன்றாத்துணை நாதர் என்னும் பெயரும் பெற்றார்.

பஞ்ச புலியூர்த்தலம்

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். வீயாகரபாதர் வழிபட்ட தலங்கள் பஞ்ச புலியூர்த்தலங்கள் என்று அறியப்படுகிறது. அவை :-

  1. திருஎருக்கத்தம்புலியூர்
  2. திருப்பாதிரிப்புலியூர்
  3. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
  4. திருப்பெரும்புலியூர்
  5. ஓமாம்புலியூர்

புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று.

பதிகம்திருப்புகழ்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. முன்னம்நின்ற முடக்கால்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. ஈன்றாளு மாயெனக் கெந்தை
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
  1. நிணமொடு குருதி நரம்பு