Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவானந்தேஸ்வரர் கோவில், திருக்கள்ளில்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கள்ளில் ( தற்போது திருகண்டலம் என்று வழங்குகிறது )
இறைவன் பெயர்சிவானந்தேஸ்வரர்
இறைவி பெயர்ஆனந்தவல்லி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சென்னை - பெரியபாளயம் சாலை வழியில் உள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்தில் இறங்கி 4 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். சென்னை கோயம்பேடு மார்க்கெட் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி நகரப் பேருந்து வசதி தடம் எண் 58-D திருக்கண்டலம் செல்ல இருக்கிறது. திருவள்ளூர் மற்றும் செங்குன்றம் ஆகிய ஊர்களில் இருந்தும் கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) வந்து இத்தலம் அடையலாம். கன்னிகைப்பேர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருகண்டலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்
திருக்கண்டலம் அஞ்சல்
வழி வெங்கல்
ஊத்துக்கோட்டை வட்டம்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 601103

இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
Tirukallil route map

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து
திருக்கள்ளில் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் அமைப்பு: கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே நந்தி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கிறது. அதையடுத்து நேரே இறைவனை கருவறை உள்ளது. சிவானந்தேஸ்வரர் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதியும், அதையடுத்து அம்பாள் ஆனந்தவல்லி அம்மை சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சந்நிதிகளும் சோமஸ்கந்தர் வடிவில் அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.

ஆலயத்தில் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், காளத்தீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உறையும் சிவானந்தேஸ்வரரை பிருகு முனிவர் ஆயிரம் கள்ளி மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்து வந்தார். இறைவன் சக்தி தட்சிணாமூர்த்தி வடிவில் காட்சியளித்து வரமளித்தார். எனவே இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்தையும் பெற்று சிவானந்தப் பேறு பெறலாம்.

இறைவன் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு வெளியே தெற்கு நோக்கியபடி அமைந்துள்ளது. நால்வர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே. 

2. ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
காடலாற் கருதாத கள்ளில் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. 

3. எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே. 
 
4. பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.

5. விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே. 

6. நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே. 

7. பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே. 

8. திருநீல மலரொண்கண் தேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 

9. வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
கரியானும் அறியாத கள்ளில் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. 

10. ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.

11. திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே. 
Tirukallil temple photo

திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர்

திருக்கள்ளில் ஆலயம் புகைப்படங்கள்

Tirukallil temple photo

ஆலயத்தின் தோற்றம், நந்தி தீர்த்தம்

Tirukallil temple photo

விநாயகர் மற்றும் காளத்தீஸ்வரர் சந்நிதி

Tirukallil temple photo

கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்

Tirukallil temple photo

சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி. அருகில் ப்ருகு முனிவர்

Tirukallil temple photo

சோமஸ்கந்த அமைப்பில் மூன்று சந்நிதிகள்