நற்றுணையப்பர் திருக்கோவில், திருநனிபள்ளி (புஞ்ஜை)
சிவஸ்தலம் பெயர்: திருநனிபள்ளி (தற்போது இத்தலம் புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்: நற்றுணையப்பர்
இறைவி பெயர்: மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி
பதிகம்: திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
நற்றுணையப்பர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருச்செம்பொன்பள்ளி சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில்
புஞ்சை (திருநனிபள்ளி)
கிடாரங்கொண்டான் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609304
ஆலய நேரம்
காலை: 8:00 - 12:00
மாலை: 5:00 - 7:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருமயிலாடுதுறை - 13 கிமி | |
| 2 | திருவிளநகர் - 7.5 கிமி | |
| 3 | திருப்பறியலூர் - 7 கிமி | |
| 4 | திருச்செம்பொன்பள்ளி - 5 கிமி | |
| 5 | திருவலம்புரம் - 8.6 கிமி | |
| 6 | திருதலைச்சங்காடு - 7 கிமி | |
| 7 | திருஆக்கூர் - 9.6 கிமி | |
| 7 | திருக்கடைமுடி - 4 கிமி |
தல வரலாறு
திருஞானசம்பந்தரின் தாயார் பிறந்த தலம்
திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் அருளால் பெற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட அவ்வூர் அந்தணர்கள் சம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று கோரினர்.
திருச்சிறப்பு நடை
அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். தந்தையால் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற "காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார்.
பாலை நிலம் நெய்தல் நிலமாக மாற்றம்
இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளயை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளிய பதிகம் என்று கூறப்படுகிறது. தனது தந்தை தோள் மீதமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததை சம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.
பதிக பாடல்
கடல்வரை ஓதம்மல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொருள் ஆறும் நாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை ஒன்ற அத்தர் பியன்மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்
நடுஇருள் ஆடும் எந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதல் ஆணை நமதே
பொழிப்புரை: கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங் களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும்.
கோவில் அமைப்பு
.மூவராலும் பாடப்பெற்ற தலம்
மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது.
முகப்பு வாயில்
முகப்பு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர்.
மூலவர் சந்நிதி
உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோவிலின் கருவறை நல்ல வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது.
கோஷ்ட மூர்த்தங்கள்
கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன.
கல்யாணசுந்தரேசர் கோயில்
விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது.
தென்திசையை நேராக்க வந்த அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றார். அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்ட ஸ்தலங்கள் -
- கொடுங்குன்றம்
- குற்றாலம்
- திருப்பனங்காடு
- திருக்கள்ளில்
- திருவொற்றியூர்
- திருவேற்காடு
- திருவான்மியூர்
- அச்சிறுபாக்கம்
- திருநல்லூர்
- திருநனிபள்ளி (புஞ்ஜை)
- திருஆக்கூர்
அம்பாள் சந்நிதி
இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் காட்சி அளிக்கிறார்.
பிற சந்நிதிகள்
உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மகாமண்டபத்தில் நடராசர் சபை உள்ளது. அத்துடன் "நனிபள்ளி கோடி வட்டம்" என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வழிபாடு
- ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 7-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.
- திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
- நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பது நம்பிக்கை.
பதிகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துப் பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துப் பதிகம்
சுந்தரர் அருளிய இத்தலத்துப் பதிகம்
மேலும் புகைப்படங்கள்